*பிளாஸ்டிக் பைகளுக்கு அனுமதியில்லை
வேலூர் : வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காட்பாடி காந்தி நகரில் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை மற்றும் ஒவ்வொரு மாதமும் 2ம் சனிக்கிழமைகளில் இயற்கை விவசாயம் மூலம் விளைவித்த காய்கறி விற்பனை சந்தை விற்பனையில் களைக்கட்டி வருகிறது.
இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டு மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. செயற்கை உரம், செயற்கை பூச்சிக் கொல்லிகளால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று உணர்ந்த மக்கள், இயற்கை முறையில் விவசாயம் செய்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய காய், கனிகளை தேடிச் சென்று வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனை வழக்கமான மார்க்கெட்டுகளிலேயே சாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்கும் மக்கள், ‘ஏம்பா, இது ஹைபிரட் காயா?’ என்று கேட்பதை காணலாம்.
அந்தளவு மக்களுக்கு இயற்கை வேளாண்சாகுபடி மூலம் கிடைக்கும் காய்கறிகள் மீதான நாட்டம் அதிகரித்து வருகிறது. அதேபோல் படித்த இளைஞர்கள், விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் மீது நாட்டம் கொள்வதும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வேலூரில் உள்ள இயற்கை விவசாயிகள், அவர்கள் தோட்டங்களில் விளைந்த பொருள்களை விற்பனை செய்ய ஏதுவான தளம் இல்லை என்று திணறி வந்த நிலையில் தான், கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி, அப்போதைய வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட ஊராட்சி வளாகத்தில் அமைந்துள்ள பூமாலை வளாகத்தில், இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனை செய்யும் வகையில் ‘நம் சந்தை’யை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின், மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக – நகர்புற வாழ்வாதார இயக்கம், இயற்கை விவசாயிகளுடன் இணைந்து இதனை செயல்படுத்தி வருகின்றனர். மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6 மணி முதல் 11 மணி வரை வேலூரில் பூமாலை வளாகத்தில் நம் சந்தை நடைபெறுகிறது. தற்போது வரை 357 வாரங்களாக நம் சந்தை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் காட்பாடி காந்தி நகரில் 2022ம் ஆண்டு முதல் மக்கள் நலச்சந்தை என்ற பெயரில் ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் மாதத்தின் 2ம் சனிக்கிழமைகளில் இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனை சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைகளில் இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பாரம்பரிய அரிசி வகைகள், மரக்செக்கு எண்ணெய் வகைகள், தேன் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக இயற்கை வேளாண் சந்தை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்செல்வனிடம் கேட்டபோது, ‘படித்த இளைஞர்கள் தன்னார்வலர்களாக நம் சந்தையினை ஆதரித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சந்தையில் பிளாஸ்டிக் பைகள் அனுமதிக்கப்படுவதில்லை. நுகர்வோர்களையே துணிப்பைகள் கொண்டு வர அறிவுறுத்தி உள்ளோம்.
தற்போது வரை வேலூர் மாவட்டத்தில் பாலமதி, ஊசூர், அணைக்கட்டு, காட்பாடி வட்டாரங்களை சேர்ந்த 200 விவசாயிகள் வரை இங்கு பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் 40-50 விவசாயிகள் பங்கேற்கின்றனர். வாரத்திற்கு சுமார் 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்கின்றனர். மாதம் ஒருமுறை விவசாயிகளுக்காக கூட்டம் சந்தை வளாகத்திலேயே நடைபெறுகிறது.
அதேபோல் காந்தி நகரில் ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் ஒவ்வொரு மாதம் 2ம் சனிக்கிழமைகளிலும், சோளிங்கர், திருப்பத்தூர் அடுத்த ஜங்கலாபுரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் கணியம்பாடி அடுத்த கீழ்வல்லத்தில் ஒவ்வொரு மாதமும் 3ம் சனிக்கிழமைகளிலும் இந்த சந்தை நடைபெறுகிறது. இதுவரை காந்தி நகரில் மட்டும் 150 டன் காய்கறிகளும், வேலூரில் 250 டன் காய்கறிகளும் விற்பனையாகியுள்ளன. 250 விவசாயிகள் இணைப்பு பெற்றுள்ளனர்’ என்றார்.
