×

பனை மரத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும்

*பனை விதைப்புக்குழு நிகழ்ச்சியில் எஸ்பி ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவில் : கன்னியாகுமாரி மாவட்டம் ’இயற்கையே இறைவன் ’பனை விதைப்பு குழுவின் 200வது வார பனை விதைப்பு சிறப்பு விழா நாகர்கோவிலில் நேற்று நடந்தது. விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் சுதாகரன் தலைமை வகித்தார்.

நிர்வாகி ஜெலஸ்டின் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி. ஸ்டாலின் கலந்து கொண்டு 16 பனை ஏறும் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கி சால்வை அணிவித்தார்.

மேலும் 12 இயற்கை காவலர்களையும் கவுரவித்து பேசியதாவது: நான் இங்கு விவசாயியின் மகனாக வந்துள்ளேன். பனை மரத்தை பற்றிய தகவல்களை நான் சேகரிக்க வேண்டியது இல்லை. எனக்கு பனையை பற்றி நன்றாக தெரியும். பனையின் வாழ்வியலை கடந்து தான் நான் இங்கு வந்துள்ளேன்.

பனை மரத்தைப் பற்றி சங்க கால இலக்கியங்களில் பல உள்ளன. அந்த அளவிற்கு அதி முக்கியத்துவமான பனைமரத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். பனை மரத்தில் வேரிலிருந்து நுனி வரை பயனுள்ளது. பனைமரம் ஒரு கற்பக விருட்சம். இவ்வாறு அவர் பேசினார்.

பனை விதைப்பு குழு கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கப்பட்டு இதுவரை 50 ஆயிரம் பனை விதைகள் குமரி மாவட்டம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரம் விதைகள் முளைத்து மரங்களாக வளர தொடங்கியுள்ளன.

500 பல்வேறு மரங்களும் நடப்பட்டுள்ளன என ஒருங்கிணைப்பாளர் சுதாகரன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பூதப்பாண்டி வனச்சரகர் அன்பழகன், கூடலூர் புள்ளியல் துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : SP Stalin ,Palm Seeding Committee ,Nagercoil ,seeding special ,Kanyakumari District ,Nature is God ,Coordinator ,Sudhakaran ,Administrator… ,
× RELATED கட்டப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு குமரி...