கொடூரமாக தாக்கி விவசாயி தலையை துண்டித்து கொன்ற கரடியை டிரோன் கேமரா மூலம் தேடும் பணி தீவிரம்

*மயக்க ஊசி துப்பாக்கியுடன் களமிறங்கிய வனத்துறையினர், மருத்துவக்குழுவினர்

விகேபுரம் : விகேபுரம் அருகே கொடூரமாக தாக்கி விவசாயியை தலையை துண்டித்து கொன்ற கரடியை வனத்துறையினர் டிரோன் மூலம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மயக்க ஊசி துப்பாக்கியுடன் வனத்துறை, மருத்துவக் குழுவினரும் களத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் கரடி பதுங்கி இருப்பதால் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி வருகி்னறனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட கரடிகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இவை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் அடம் பிடித்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் குடியிருப்பு பகுதியில் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் கரடி தனியாகவோ அல்லது கூட்டமாகவோ இரை தேடி நடமாடி வருகிறது. சாலைகள், தெருக்களில் உலா வந்த கரடிகள் கடந்த சில நாட்களாக வீடுகளுக்குள் புகுந்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இரை தேடி அலையும் கரடிகள் ஆக்ரோஷத்தில் சாலையில் செல்வோரை விரட்டுவது மட்டுமின்றி தாக்கியும் வருகிறது. இதுவரை 6க்கும் மேற்பட்டோரை கரடிகள் தாக்கியுள்ளது. ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைப்பது பிடிக்க வேண்டும்.

இல்லையெனில் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் வனத்துறையினர் கரடியை பிடிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன்விளைவாக கடந்த 31ம் தேதி விகேபுரம் அருகே வடமலைசமுத்திரம் பகுதியில் தோட்டக்காவலாளியாக பணியாற்றிய முருகன், கரடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதுவும் வனத்துறையினர் முன்னிலையில் முருகனின் தலையையும், உடலையும் கரடி துண்டாக்கியது. 3 மணி நேரத்திற்கு மேலாக முருகனின் உடல் அருகேயே நின்று கொண்டிருந்த கரடியை வனத்துறையினர் விரட்ட கூட முயற்சிக்கவில்லை. பின்னர் கரடி அங்கிருந்து சென்ற பிறகே முருகனின் சடலத்தை வனத்துறையினர் ைகப்பற்றினர்.

இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் கரடி நடமாடி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டாமல் அலட்சியம் காட்டியதன் விளைவு தான் விவசாயி பலியானதற்கு காரணம் என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகே மிகவும் தாமதமாக அலர்ட்டான வனத்துறையினர் விவசாயி உயிரை காவு வாங்கிய கரடியைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக பாபநாசம், கடையம் வனச்சரகம் சார்பில் வடமலைசமுத்திரம் பகுதியில் கரடியை பிடிக்க நான்கு இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூண்டையும் கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுக்கள் என மொத்தம் 25க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.

கரடியின் நடமாட்டத்தை துல்லியமாகக் கண்டறிய ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கால்நடை மருத்துவக் குழுவினரும் இரண்டு மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். கரடி கண்டறியப்பட்டவுடன் பாதுகாப்பாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் இதுவரை கரடி எங்கிருக்கிறது என்று கூட கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் தடுமாறி வருகின்றனர்.

இருப்பினும் கரடி நடமாட்டம் பதிவாகும் பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் கரடி அல்லது பிற வனவிலங்குகளின் நடமாட்டம் தென்பட்டால் அருகேயுள்ள வனத்துறை அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வனத்துறையினரின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: