தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளால் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு இழப்பீடு.!! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…

டெல்லி: தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளால் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற போது மாடு முட்டியதில் உயிரிழந்தார். இறந்தவரின் மனைவி தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1988-ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் ரூ.29.32 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

எனினும் இந்த வழக்கு மேல் முறையீடு சென்றது, அப்போது தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெருவில் சுற்றித்திரியும் விலங்குகள், நாளின் முடிவில் தங்களிடம் வந்து சேர்வதை அவற்றின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

விலங்குகளின் உரிமையாளரே அவற்றால் நேரிடும் விபத்துகளுக்கு பொறுப்பு ஆவார். இதை கருத்தில் கொண்டு தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளால் நேரும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உரிய நெறிமுறைகளை உருவாக்க உச்சஅநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதே போல வீட்டு விலங்குகளுக்கு அடையாளம் அறியும் கண்காணிப்புப் பட்டையை கட்டாயம் பொருத்த வேண்டும். இதனால் அது எங்கு செல்கிறது என்பதை கண்காணிப்பதோடு, அதற்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் போன்ற நீண்ட காலம் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: