மினிமம் பேலன்ஸ் பராமரிக்காதவர்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ.7,086 கோடி அபராதம்.!!

டெல்லி: வங்கிகளில் மினிமம் பேலன்ஸை பராமரிக்காதவர்களிடம் இருந்து நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.7,000 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் தனியார் வங்கிகள் மட்டும் கிட்டத்தட்ட ரூ.5000 கோடி வசூலித்துள்ளதாக ஒன்றிய அரசு கூறி இருக்கிறது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் மத்திய நிதியமைச்சக இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து 2025-26 நிதியாண்டில் இந்திய வங்கிகள் ரூ.7,086 கோடிக்கும் அதிகமாக அபராதம் வசூலித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் தனியார் வங்கிகள் ரூ.4,948.71 கோடியும், பொதுத்துறை வங்கிகள் ரூ.2,137.92 கோடியும் வசூல் செய்யதுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளில் HDFC வங்கி மட்டுமே ரூ.1,798.14 கோடியும், Axis வங்கி ரூ.1,081.33 கோடியும் அதிகபட்சமாக வசூலித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூன்றாவதாக ICICI வங்கி ரூ.353.50 கோடியை வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக பிடித்துள்ளது.

அரசு வங்கியான SBI சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்திருந்தாலும், நடப்பு கணக்குகளில் இருந்து ரூ.477.27 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வாடிக்கையாளர்களின் அக்கவுண்டில் இருந்து பணம் குறையும் போது அதாவது பராமரிக்க வேண்டிய மினிமம் பேலன்ஸ் தொகை குறைந்தவுடன், உடனே அபராதம் விதிக்கக் கூடாது என்றும் மெசேஜ் அல்லது இ-மெயில் மூலம் எச்சரிக்கை விடுத்த பின்னரே, வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: