மேட்டடு: தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில், ஆப்பிள் பழங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக லாரியில் இருந்த ஏராளமான ஆப்பிள்கள் கீழே விழுந்து சாலையில் சிதறின. இதனை பார்த்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் காயமடைந்த லாரி ஓட்டுனருக்கு உதவாமலும், ஆப்பிள்களை எடுத்து தராமலும் சாலையில் சிதறிய ஆப்பிள்களை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரங்கல் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில், மகபூபாபாத் மாவட்டத்தின் தொற்றூர் மண்டலத்திற்குட்பட்ட மேட்டடு கிராமப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சாலையில் சிதறிய ஆப்பிள்களை அங்கிருந்தவர்கள் எடுத்துச் சென்றதால் சரக்கு இழப்பும் ஏற்பட்டது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் லாரி கவிழ்ந்ததாகக் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்; விபத்தைத் தொடர்ந்து ஆப்பிள் பெட்டிகள் நெடுஞ்சாலை முழுவதும் சிதறிக் கிடந்தன.
விபத்து நடந்தவுடன் லாரியில் இருந்த ஆப்பிள் பெட்டிகள் உடைந்து, பழங்கள் அனைத்தும் நெடுஞ்சாலையிலும், பள்ளத்திலும் சிதறி விழுந்துள்ளன. இதைப் பார்த்த அருகில் இருந்த கிராம மக்கள், அவ்வழியே சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எனப் பலரும் அங்கு திரண்டனர். விபத்தில் சிக்கி காயமுற்ற லாரி டிரைவருக்கு உதவாமல் அங்கு திறண்ட ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது பைகள், மூட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் ஆப்பிள்களை அள்ளிச் சென்றனர்.
வெறும் 15 நிமிடங்களுக்குள் லாரியில் வந்த மொத்த ஆப்பிள்களையும் முழுமையாக அள்ளிச் சென்று காலி செய்த சம்பவம் மனிதாபிமானத்தையும், உண்மை, நேர்மையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.விபத்தில் சிக்கியவருக்கு உதவாமல் பழங்களைத் தூக்கிச் சென்ற மக்களின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
