கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி கேட்டு கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்

 

மயிலாடுதுறை, ஜூலை 31: கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி கேட்டு கண்களில் கருப்பு துணி கட்டி மயிலாடுதுறை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் காந்த் தலைமையில் நடந்தது. இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் தடுக்க வந்ததால் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும் கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து சீர்காழி அருகே கற்கோவில் பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயி ரவிச்சந்திரன் கூட்ட அரங்கில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டார்.குடிப்பதற்கு கூட குறைந்தபட்ச தண்ணீரை வழங்காத கர்நாடக அரசு, வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், குளறுபடியான கூட்டுறவு கடனை ரத்து செய்து கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் கூட்டத்தில் விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி 5 நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது, துரை சரவணன்: பழுதடைந்த மின் மோட்டார்களை சீரமைத்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகிக்க வேண்டும். அளக்குடியில் 710 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ராகவன்: ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார், ஓவர்சியர் ரூ.25 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிதி: ஆலங்குடியில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ரூ.40 லஞ்சம் வாங்கினால் உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்யாணம்: என்பிகேஆர்ஆர் சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கு ரூ.124 கோடி தேவைப்படும் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசின் வரம்பிற்குட்பட்டது. தற்போது மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள சர்க்கரை ஆலைகளை ஆய்வு செய்து, அவற்றைப் புணரமைக்க ஒரு சிறப்புக் குழுவை அனுப்பவுள்ளது. அக்குழு வரும்போது இந்த கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்தினால், ஆலையை மீண்டும் இயக்கும் பணி விரைவுபடுத்தப்படும். மயிலாடுதுறைக்கு தனியாகச் செயற்பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

செல்வ முத்துக்குமார்: யூரியா இருப்பு இல்லாததால் ஒரு நபருக்கு 8 மூட்டைகள் மட்டுமே யூரியா வழங்கப்படுகிறது. இது 40 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்பவர்கள் எப்படி போதுமானதாக இருக்கும். யூரியா இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதேபோல விவசாயிகள் முருகன், கோவி நடராஜன், செந்தில், ராமலிங்கம், கோதண்டராமன் கூட்டத்தில் பேசினர். கூட்டத்தில் குளறுபடிகளை களைந்து உண்மையான விவசாயிகள் அனைவருக்கும் குறுவை தொகுப்பு பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்ற கலெக்டர் காந்த் உரிய பதிலளித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.கூட்டத்தில் டிஆர்ஓ பூங்கொடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நலினா, வேளாண்மை துறை இணை இயக்குநர் விஜயராகவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: