வத்தல்மலையில் உள்ள 13 கிராமங்களை இணைத்து ஒரே ஊராட்சியாக்க வேண்டும்: அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

 

தர்மபுரி, ஆக.4: வத்தல்மலையில் உள்ள 13 கிராமங்களையும் ஒன்றாக இணைத்து, ஒரே ஊராட்சியாக மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரியில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது வத்தல்மலையை, கடந்த 2012ம் ஆண்டு சுற்றுலா தளமாக தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து வத்தல்மலைக்கு அடிவாரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவிற்கு சுமார் ரூ.18 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. வத்தல்மலையில் பெரியூர், சின்னாங்காடு, கொட்லாங்காடு, மண்ணாங்குழி, நாய்க்கனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் வசிக்கும் 7 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பின்தங்கியே காணப்படுகிறது. இதுபற்றி வத்தல்மலை கிராம மக்கள், தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியுள்ளதாவது: வத்தல்மலையில் உள்ள கிராமங்களில், நெடுங்காலமாக அரசு நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு நில உரிமை பட்டா வழங்க வேண்டும்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருந்த போதும், எந்த நல உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. பொது போக்குவரத்து வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. எனவே, வத்தல்மலைக்கு நல்லம்பள்ளியில் இருந்து மினி பஸ் இயக்க வேண்டும். பெரியூரில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண், பெண் மருத்துவர்கள் 24 மணி நேரமும் தங்கி இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, பொட்டலாங்காடு, மண்ணாங்குழி, நாய்க்கனூர், ஒன்றியங்காடு, திருவானைப்பாடி, போன்றிக்காடு, குழியனூர், சஞ்சீவி நகர் உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளன. இதில் பெரியூர் தர்மபுரி தாலுகாவிலும், பால்சிலம்பு பாப்பிரெட்டிபட்டி தாலுகாவிலும், திருவானைப்படி கிராமம் நல்லம்பள்ளி தாலுகாவிலும் உள்ளன.

இதே போல், தர்மபுரி, நல்லம்பள்ளி, மொரப்பூர் ஒன்றியங்களிலும் பிரிந்து உள்ளன. இதேபோல் மிட்டாதின்னஅள்ளி, கொண்டகரஅள்ளி, சில்லாரஅள்ளி வருவாய் கிராமங்களாகவும் பிரிந்து காணப்படுகிறது. எனவே, வத்தல்மலை கிராமங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே ஊராட்சியாக மாற்றவேண்டும். வத்தல்மலையில், மலையாளிகள் 5 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். மத்திய அரசு பழங்குடியினர் வாழும் பகுயாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு 100 சதவீதம் விவசாயம், தொழில் துவங்க மானியம் வழங்கும் வகையில், பல்நோக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும். காபி போர்டு 100 சதவீதம் மானியத்தில் இடுபொருட்கள், விதைகள் வழங்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: