தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை குதிரைபேர வழக்கின் விசாரணைக்கு தடை: தலைமை நீதிபதி பெஞ்ச் அதிரடி உத்தரவு: பீதியில் போலீஸ் அதிகாரிகள்

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், ரமேஷ் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டால் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்ற பரபரப்பு போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

தவெக அரசுக்கு எதிராக செயல்பட தன்னிடம் குதிரை பேரம் நடத்தியதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து, இதில் தொடர்புடைய 14 பேரை கைது செய்தனர். இவர்களில் ரமேஷ் என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும், என்று ரமேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ‘‘உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் மனுதாரரை, சம்பந்தம் இல்லாமல் இந்த வழக்கில் போலீசார் கைது செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களிடம் செல்போனில் பேசினார் என்பதற்காக மனுதாரருக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில காவல் துறையினர் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு ஏதேனும் விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். எந்தவித வாரண்டும் இல்லாமல் மனுதாரர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், ஒரு லட்சத்து 3000 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்’’ என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘‘10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த குற்றச்சதியில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது.

இதுவரை மொத்தம் 2 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொய் வழக்கு ஜோடிக்க அவசியம் இல்லை. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘வழக்கின் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் சிபிஐக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும், மனுதாரர் ரமேஷுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டால், பல போலீஸ் உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினர்தான் விசாரித்திருக்க வேண்டும். இந்த புகாரை உளவுத்துறை, முதலில் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆதாரம் இல்லாததால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆதாரம் இல்லாத வழக்கை வைத்து திருவல்லிக்கேணி உயர் அதிகாரிகள் மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரிகளின் வற்புறுத்தல் காரணமாக, விசாரணையை ஆரம்பித்து, அதன் மூலம் ஆதாரத்தை தேடி வருவதாகவும், அதில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்ற ஒற்றை காரணத்தை வைத்தே வழக்கு நகர்வதால், இந்த வழக்கில் பல ஜோடிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டால், சென்னையைச் சேர்ந்த பல போலீஸ் உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் தற்போது வழக்கை விசாரித்த அதிகாரிகள், உத்தரவிட்ட அதிகாரிகள் பீதியடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்ற ஒற்றை காரணத்தை வைத்தே வழக்கு நகர்வதால், இந்த வழக்கில் பல ஜோடிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டால், சென்னையை சேர்ந்த பல போலீஸ் உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: