நியூசிலாந்தை ஒளிரச் செய்த பிரம்மாண்ட விண்கற்கள்: அதிவேக ஒலியுடன் வெடித்த விசித்திர நிகழ்வு!

வெலிங்டன்: நியூசிலாந்து முழுவதும் இரவு வானில் அடுத்தடுத்து இரண்டு ராட்சத விண்கற்கள் கண்கவர் ஒளியுடன் வலம் வந்தன. இவற்றுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் மக்களை மிரளச் செய்துள்ளன. தெற்கு தீவுப் பகுதிக்கு மேல் பெரிய விண்கல் ஒன்று சென்றதைத் தொடர்ந்து, வடக்கு தீவுப் பகுதிக்கு மேலே இரண்டாவது ஒளிரும் விண்கல் வானைக் கிழித்துச் சென்றது என கூறப்படுகிறது. இந்த நிகழ்வின்போது கார்களின் கேமராக்களில் வானம் வெள்ளை, ஆரஞ்சு மற்றும் ஊதா நிறப் பிரகாசத்தால் ஜொலித்தது பதிவாகியுள்ளது.

மக்களின் அதிர்ச்சி அனுபவமாக, விண்கல் கிழக்கிலிருந்து மேற்காகச் சென்று இரவு வானை வெளிச்சமாக்கியதுடன், கடந்து சென்ற பின்பும் அதன் தடயம் ஒரு நிமிடத்திற்கும் மேலாக வானில் தெரிந்தது எனவும், விண்கல் ஆரஞ்சு நிறப் பந்து போல் எரிந்து கொண்டிருந்தது என்றும் அதிலிருந்து கரும்புகை வெளியேறுவதையும் எங்களால் பார்க்க முடிந்தது எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வு கண்களுக்கு விருந்தாக மட்டும் இல்லாமல், வளிமண்டலத்தில் சக்திவாய்ந்த ஒலி அலைகளை உருவாக்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகளும் வனவிலங்குகளும் அச்சமடைந்த. விண்கற்கள் அதிவேகத்தில் வினாடிக்கு பல 10 கி.மீ. வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, அவற்றுக்கு முன்பாக உள்ள காற்று கடுமையாக அழுத்தப்படுகிறது. இந்த விரைவான அழுத்தம் காரணமாக சுற்றியுள்ள காற்று அதிவேகமாக சூடாகி, கண்கவர் ஒளியையும் தரையில் உணரப்பட்ட அதிர்வலைகளையும் ஏற்படுத்துகிறது என்று வானியலாளர்கள் விளக்குகின்றனர்.

Related Stories: