வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக பேஸ்புக்கில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ நீக்கம்: மன்னிப்பு கேட்டது மெட்டா நிறுவனம்; விளக்கம் ஏற்புடையதல்ல என சம்மன்

புதுடெல்லி: வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து பேஸ்புக்கில் பிரதமர் மோடி வெளியிட்ட முதல் செல்பி வீடியோ நீக்கப்பட்டது. இதுதொடர்பாக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரிய நிலையிலும், விளக்கம் ஏற்புடையதல்ல எனக் கூறி அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஒன்றிய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பிரதமர் மோடி 3 முறை செல்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்து கடந்த 23ம் தேதி முதல் வீடியோ வெளியிட்டார். அவரது பேஸ்புக் கணக்கிலிருந்து பகிரப்பட்ட இந்த வீடியோ நேற்று திடீரென நீக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாஜ தொண்டர் ப்ரீத்தி காந்தி என்பவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர், இந்தியாவின் இளைஞர்களுடன் இணைவதற்காக தனது முதல் நேரடி செல்பி வீடியோவைப் பதிவேற்றி இருக்கிறார். அதை பேஸ்புக் கட்டுப்படுத்துகிறதா? கோடிக்கணக்கான இந்தியர்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதை தீர்மானிக்க மெட்டாவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இது வெறும் வீடியோ முடக்கம் மட்டுமல்ல.

இது உங்கள் அரசியல் சார்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. பதிலளிக்கவும்’’ என கூறியிருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம், ‘‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த வீடியோ தவறுதலாக அகற்றப்பட்டுள்ளது. தற்போது கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் வீடியோ சேர்க்கப்பட்டுள்ளது’’ என விளக்கம் அளித்தது.

மேலும், மெட்டா நிறுவனத்தின் தானியங்கி கன்டென்ட் பில்டர் அம்சத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே பிரதமர் மோடியின் வீடியோ பதிவு நீக்கத்திற்கு காரணம் என ஒன்றிய அரசுக்கு விளக்கம் அளித்தது. ஆனாலும், இந்த விளக்கம் ஏற்புடையதல்ல என தெரிவித்த ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய பொதுக் கொள்கை பிரிவுத் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் விடுத்துள்ளது.

Related Stories: