விபத்து வழக்கில் வாகனத்தை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ அதிரடி கைது

*ஆலங்காயத்தில் பரபரப்பு

ஆலங்காயம் : ஆலங்காயத்தில் விபத்து வழக்கில் வாகனத்தை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக எஸ்எஸ்ஐ கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் கடந்த 19ம் தேதியன்று தனது காரில் காவலூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக, காவலூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லட்சுமணன் மனைவி லட்சுமி (61) படுகாயமடைந்தார். இதுகுறித்து காவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சுநாதனின் காரை பறிமுதல் செய்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தனது காரை விடுவித்து தருமாறு மஞ்சுநாதன் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். அப்போது, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் காவல் நிலைய எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணன், காரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனக்கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மஞ்சுநாதன், இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனைபடி, ரூபாய் நோட்டுகளை மஞ்சுநாதன் நேற்று ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்று எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். அதை அவர் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி தலைமையிலான போலீசார், ராமகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்திலும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: