சென்னை: கர்நாடகாவிலிருந்து சரக்கு லாரியில் செம்மரக் கட்டைகளை கடத்தி வருவதாக சென்னை தியாகராய நகரில் உள்ள வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு போலீஸ் பகுதிக்கு உட்பட்ட உட்கோட்டை பகுதியில் ஒரு தொழிற்சாலைக்கு சென்ற வருவாய் புலனாய் பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
லாரியில் கர்நாடகாவில் இருந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தி வந்ததை வருவாய் புலனாய் போலீசார் கண்டுபிடித்தனர். செம்மரக் கட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருமழிசை பகுதியைச் சேர்ந்த டேனியல் (28), விஜி (30), லயன் சுரேஷ் (36), பன்னு (எ) ஜெய் (35) மற்றும் தொழிற்சாலை மேலாளர் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பிறகு தியாகராய நகர்அலுவலகத்திற்கு அழைத்து வந்து யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என விசாரித்து வருகின்றனர்.
