தன்னிடம் செல்போன் பறித்த நபரை பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண் போலீஸ்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

 

சென்னை: செல்போன் பறித்த நபரை பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண் போலீஸ் படுகாயமடைந்தார். தென்காசியை சேர்ந்தவர் அடோலின் பிரபா (26), இவர் லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள காவல் துறை தடய அறிவியல் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் செல்போனில் பேசியபடி பயணம் செய்தார்.

அப்போது தாம்பரம், சானடோரியம் ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டபோது மர்ம நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அடோலின் பிரபாவின் செல்போனை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அடோலின் பிரபா அந்த நபரை பிடிப்பதற்காக ஓடும் ரயில் இருந்து கீழே குதித்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு முகம், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அவ்வழியாக வந்த மக்கள் செல்போனை பறித்து ஓடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து அடோலின் பிரபாவை மீட்டு தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், செல்போன் பறித்த நபர், வட மாநிலத்தை சேர்ந்த அஜய் நாயக் (28) என்பது தெரிய வந்தது. அந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததால் போலீசாருக்கு ஒத்துழைக்காமல் ரகளை செய்தபடி இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென அங்கு கை குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் தான் அஜய் நாயக்கின் மனைவி எனக் கூறி அவரது கணவரை விடுவிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: