இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பலமுறை ராணுவத் தளபதிகள் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்ற சூழல் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் ராணுவத்தின் பங்கு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த புதிய அரசு, ராணுவத்திற்கும் ராணுவத் தளபதிக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானின் அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான அதிகாரங்கள் அசிம் முனீரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தங்களின்படி, அசிம் முனீர் முப்படைகளின் சுப்ரீம் கமாண்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும், இதற்கு முன்பு பிரதமரின் தலைமையின் கீழ் செயல்பட்ட தேசிய கட்டளை ஆணையம் (National Command Authority – NCA) அமைப்புக்கு மாற்றாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் (National Security Council – NSC) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அணு ஆயுதங்கள் தொடர்பான நிர்வாக மற்றும் செயல்பாட்டு அதிகாரங்கள் அந்த அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அந்த புதிய அமைப்பின் தலைமை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகக் கூறப்படுவதால், அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் ராணுவத்தின் வசம் சென்றுள்ளதாக பரவலாக விவாதிக்கப்படுகிறது. பொதுவாக, அணு ஆயுதங்களின் இறுதி கட்டுப்பாடு ஒரு நாட்டின் சிவில் அரசின் வசமே இருக்கும். ஆனால், அதற்கு மாறாக பாகிஸ்தானில் அந்த அதிகாரம் ராணுவத்தின் கையில் சென்றிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தொடர்ந்து கடுமையான இந்தியா எதிர்ப்பு கருத்துகளையும், எச்சரிக்கைகளையும் வெளியிட்டு வரும் நிலையில், அணு ஆயுத அதிகாரமும் அவரது வசம் குவிவது இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தலை அதிகரிக்கக்கூடும் என்று சில பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
