×

பூண்டி நீர்த்தேக்கத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் மதகு அருகில் கட்டப்பட்டிருந்த சிமென்ட் தளம் சேதமடைந்து அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால், மதகு அருகில் கட்டப்பட்டிருந்த சிமென்ட் தளம் சேதமடைந்து அபாயம் நிலையில் உள்ளது. எனவே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் திருவள்ளூரை அடுத்த பூண்டி கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 1939 முதல் 1944ம் காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் சென்னை மாநகர முன்னாள் மேயர் சத்தியமூர்த்தி பெயரால் உருவாக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் மூலம் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நீர்த்தேக்கத்தில் கூடுதலாக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக 2 அடி உயர்த்துவதற்காக 1991ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணி 1997ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டு 2 அடி உயர்த்தும் பணி முடிக்கப்பட்டது.

இதனால் நீர் இருப்பு 2 அடி உயர்ந்தது. மேலும் நீர் தேக்கம் நிரம்பினால் அதில் இருந்து உபரிநீர் வெளியேறும் வகையில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் 3231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் 35 அடி உயரத்தில் 3458 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் – ஆந்திர மாநிலங்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டு பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, பிறகு இணைப்பு கால்வாய்கள் மூலம் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் தண்ணீர் இருப்பு நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் கடந்த 2022ம் ஆண்டு 656 மில்லியன் கன அடியாகவும், கடந்த 2023ம் ஆண்டு 2082 மில்லியன் கன அடியாகவும், கடந்த 2024ம் ஆண்டு வெறும் 90 மில்லியன் கன அடியாகவும் மட்டுமே நீர் இருப்பு இருந்தது. அதேபோல் கடந்த 2025ம் ஆண்டு 1400 மில்லியன் கன நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பூண்டி நீர்தேக்கத்தில் 1001 மில்லியன் கனஅடி (1 டிஎம்சி) தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின்போது நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து உபரி நீர் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிகளவு தண்ணீர் தேங்கியதால், நீர்தேக்கத்தின் உட்பகுதியில் மதகு அருகில் கட்டப்பட்டிருந்த, சிமென்ட் தளம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு நீர்தேக்க கரை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சேதமடைந்த நீர்தேக்கத்தின் கரையின் உட்பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bundi reservoir ,THIRUVALLUR ,BUNDI ,MADAKU ,Chennai Municipal ,
× RELATED தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை...