×

சென்னை சென்ட்ரல் மெட்ரோ அருகே கல்லூரி மாணவர்கள் மோதல்: 2 பேர் காயம், போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரு வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று காலை, இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். குறிப்பாக, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் இரண்டு கல்லூரி மாணவர்கள் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த ஏம்ராஜ் மற்றும் பொன்னேரியைச் சேர்ந்த நிதீஷ்குமார் (பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு மாணவர்) ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆறுக்கும் மேற்பட்ட கத்திகளுடன் வந்து தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த இரு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் தற்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் யார், அவர்கள் எந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பட்டப்பகலில், அதுவும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வெளியே இந்த மோதல் நடைபெற்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்து அங்கிருந்து பதற்றத்துடன் ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Tags : Chennai Central Metro ,Chennai ,Chennai Central Metro train station ,
× RELATED பூண்டி நீர்த்தேக்கத்தில் அதிகளவு...