×

பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்: சட்டப்பூர்வ உரிமையை சிதைக்க விரித்திருக்கும் சதிவலையில் சிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தல்

சென்னை: பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பூர்வ உரிமையை சிதைக்க கர்நாடகா விரித்திருக்கும் சதிவலையில் சிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நாம் எடுத்த முயற்சிகளின் வரலாறு மிக நீண்டது.

1960களில் தொடங்கி 1990 வரை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் கிடைக்காததால்தான் அது கைவிடப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, சமூகநீதி காவலர் வி.பி.சிங் ஆட்சி காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன்பிறகும் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை வழங்குவதில் அநீதி இழைத்து வந்தது கர்நாடக அரசு. கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்ட போதெல்லாம், அதனை உறுதியாக திமுக அரசு நிராகரித்தது.

ஏனென்றால், பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே கர்நாடக மாநில அரசு செயல்படும். உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்னையை இழுப்பதாகவே அந்த பேச்சுவார்த்தைகள் அமையும்.
அதிலும் குறிப்பாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிப்பதாகும். எனவே, இதுகுறித்து கர்நாடக அரசுடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயனில்லை என்பதே நமது நிலைப்பாடாகும்.

மேகதாது குறித்து பேசுவதற்காக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்தபோது, முதல்வராக இருந்த நான், “அந்த பேச்சுக்கே இடமில்லை” என மறுத்தேன். அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனும், “பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என திட்டவட்டமாக அறிவித்தார். முற்றிலும் தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும், உழவர் பெருமக்களுக்கும் விரோதமானது அந்த திட்டம். அதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்பதே ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்.

இந்நிலையில், கர்நாடகா சென்று அம்மாநில முதல்வருடன் தமிழ்நாடு முதல்வர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என வேளாண்துறை அமைச்சரே தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும், அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்றும், யார் எதிர்த்தாலும் கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக மாநில அரசு வெளிப்படையாக, தொடர்ச்சியாகச் சொல்லும் போது, அவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது?.

அவர்களது பிடிவாத குணத்தை நேரில் கேட்டு தெரிந்து கொள்ளப் போகிறோமா?. காவிரி நீர் திறக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே ஒரு “ஸ்கீம்” உருவாக்கப்பட்டு, எந்தெந்த மாதம் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதும் உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்து வெளியிடப்பட்டு விட்டது. அதை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு செல்வது என்பது தமிழ்நாடு அரசின் 30 ஆண்டுகால சட்ட போராட்டத்தை சிதைப்பதாக அமைந்துவிடும். பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு முதல்வர் கர்நாடகா செல்வது, தமிழ்நாட்டின் நிலையை குறைப்பதாகவும் அமைந்துவிடும். ஏற்கெனவே உள்ள சட்டப்பூர்வ உரிமையை சிதைக்க “பேச்சுவார்த்தை” என கர்நாடகா தற்போது விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று தமிழ்நாடு முதல்வர் சிக்குவது ஏன்?.

தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்க்கும் விதமாக முதல்வர் செய்யும் இந்த செயலை பார்த்து காவிரி டெல்டா விவசாயிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர கர்நாடகா மறுத்தால், அது நீதிமன்ற அவமதிப்பு; சட்ட மீறல். மேகதாது அணை கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை மீறுவது.

எனவே, அனைத்து கட்சிகளின் ஆலோசனையையும், விவசாய சங்கங்களின் கருத்துகளையும் பெற்று முதல்வர் செயல்பட வேண்டும். காவிரி உரிமை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா செல்லும் தவறான முயற்சியை முதல்வர் கைவிட வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாகவும், தமிழக மக்கள் அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ‘முதல்வர் வாயை திறப்பது எப்போது?’
மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழகத்தில் தொடரும் காவல் மரணங்கள். முதல்வர் வாயை திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும்போது, “சாரி சொன்னால் போதுமா?, நீதி வேண்டும்,” என என்னை பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதல்வரானதும் அதை கூட செய்ய துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார். பொறுப்புக்கூறல், மன்னிப்பு கோருதல் முதல்வருக்கு பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல கூட மனமிரங்காத படுபாதக தவெக அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என கூறியுள்ளார்.

* 40க்கும் மேற்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள் சந்திப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவேரி தனபாலன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அப்போது கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தார்.

Tags : CM Vijay ,Karnataka ,MK Stalin ,Chennai ,CM ,Vijay ,DMK ,president ,MK Stalin… ,
× RELATED 10 இடங்களில் நேற்று வெயில் சதம்...