×

மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மோடி, அமித்ஷாவின் அட்டுழியம் வரலாற்றில் நடக்காத ஒன்று: மாணிக்கம் தாகூர் பேச்சு

சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில், மாணவர்களுக்கு எதிரான ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் தி.நகர் பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் முன்னிலை வகித்தார். தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், மார்க்சிஸ்ட் சு.வெங்கடேசன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் சுப்பராயன் எம்பி, மதிமுக வைகோ, அமைச்சர் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனி எம்பி, காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் உரையாற்றினர். காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விளக்க உரையாற்றினார்.

முன்னதாக, ஒன்றிய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: டெல்லியில் கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் அருகே மாணவர்கள், இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி கண்டிக்கத்தக்கது. மோடியும், அமித்ஷாவும் செய்த அட்டூழியம் என்பது டெல்லி வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

ஜந்தர் மந்தரில் இப்படிப்பட்ட கொடுமை என்பது எப்போதுமே நடக்காத ஒன்று. அன்னா ஹசாரே, கெஜ்ரிவால் போராட்டம் நடந்த போது, காங்கிரஸ் சார்பில் 5 ஒன்றிய அமைச்சர்கள் அவர்களை சந்தித்து பேசினர். ஆனால் மோடியும், அமித்ஷாவும் மாணவர்களை அடித்து நொறுக்கி, பெண்களை இழிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்தில், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, தணிக்காச்சலம், அருள் பெத்தையா, எம்.எஸ்.காமராஜ், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், மருத்துவர் அணி மாநில தலைவர் டாக்டர் கலீல் ரகுமான், ஓபிசி பிரிவு தலைவர் நவீன், துணை தலைவர் மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் விஜய சேகர், கராத்தே செல்வம், ஜோதி பொன்னம்பலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Modi ,Amit Shah ,Manickam Thakur ,Chennai ,Tamil Nadu Congress ,T. Nagar ,anti ,Union government ,President ,Ghulam Ahmed Mir ,
× RELATED டன்னுக்கு ரூ.4,500 வழங்க வலியுறுத்தி...