×

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: மு.வீரபாண்டியன் வரவேற்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு தேசிய தேர்வு முகமை மூலம் நடத்திய நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்விக் கனவுகள் சிதைக்கப்பட்டன. அதேபோல், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்ட தவறுகள், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கத்தினர் மற்றும் மாணவர், இளைஞர்களோடு இணைந்து, தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட போராளிகள் படுகாயமடைந்தனர். இதன் விளைவாக போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து தீவிரமானது.

இளைய தலைமுறையின் போராட்டத்திற்கு அடிபணிந்து, ஒன்றிய அரசு அரசு தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளது. இது அறவழியில் போராடிய இளம் போராளிகளுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியாகும். அவர்களுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union ,Education Minister ,Dharmendra Pradhan ,M. Veerapandian ,Chennai ,Communist Party of India ,State Secretary ,NEET ,Union Government ,National Examinations Agency ,
× RELATED டன்னுக்கு ரூ.4,500 வழங்க வலியுறுத்தி...