சென்னை: நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், கடந்த 6 நாட்களாக நடைபெறும் போராட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் பிரபல பாடகர் தெருக்குரல் அறிவு பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அப்போது கனிமொழி எம்பி பேசியதாவது: இந்த போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்த நாட்டுக்கே நீங்கள் அனைவரும் வழிகாட்டியாக மாறி உள்ளீர்கள். தங்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது, என ஒன்றிய பாஜ அரசு நினைத்துக்கொண்டு இருக்கிறது. நீட் வேண்டாம் என்று தமிழகத்திலிருந்து தான் முதல் எதிர்ப்பு குரல் வந்தது.
திமுக இன்று வரை நீட் வேண்டாம் என்று நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்திற்கு பிறகாவது மாணவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு நீட் வேண்டாம் என்பதை ஒன்றிய பாஜ அரசு உணரும். அவ்வாறு உணரவில்லை என்றால் தமிழ்நாடு அதை உணர வைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
