நீட் போராட்டத்தால் ஜனநாயகன் பிளாப்: ஆர்பி உதயகுமார் தகவல்

 

மதுரை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வுக்கு எதிராக ஊரே போராட்டக் களத்தில் இருக்கும்போது தன் சகாக்களுடன் ஜனநாயகன் படத்தை கண்டு களித்திருக்கிறார் முதல்வர் விஜய். மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் விஜய் தம்பிமார்கள். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து சொல்லாமல் இருக்கிறார் முதல்வர் விஜய்.

ஒருவேளை ஜனநாயகன் திரைப்படம் இந்த நீட் போராட்டத்தினால் பிளாப் ஆகிவிட்டது என்ற கவலையிலே இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. இரண்டு நாளாக தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை. எது எப்படி போனாலும் சரி, நாடு எதிர் கொண்டிருக்கிற மிகப்பெரிய வறட்சி பேரிடர் குறித்து, உரிய கவனம் செலுத்துமா தவெக அரசு என்பதுதான் நாட்டு மக்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. நீர்வளத்துறை அமைச்சரிடம் மேகதாது குறித்து கேள்வி எழுப்பினால் வாய் திறக்க மறுக்கிறார். ஆனால், ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்கார்ன் சாப்பிட மட்டும் அவர் வாய் திறக்கிறார்.

அருணாச்சலம் என்ற இளைஞர் காவல்நிலையத்தில் உயிரிழந்திருக்கிறாரே அந்த தாயின் கண்ணீரை துடைக்க வருவாரா? எங்களுக்கு சாரி வேண்டாம்; நீதி தான் வேண்டும் என்று போராடுகிற அந்த விஜய்யை, தமிழகத்தில் இருந்து காணவில்லையே என்று தேடிக் கொண்டிருக்கிறது ஜென்சி தலைமுறை. இதற்கு விடை கொடுப்பாரா முதல்வர் விஜய். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories: