×

ஜூலை 20 பேரணி சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரை அடையாளம் காண சிஜேபி புதிய இணையதளம் தொடக்கம்

புதுடெல்லி: ஜூலை 20ம் தேதி பேரணி சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்களை அடையாளம் காண புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக சிஜேபி தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் கல்வித்துறை முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை(20ம் தேதி) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.  இந்நிலையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்களை அடையாளம் காண கரப்பான் பூச்சி ஜனதா கட்சி புதிய இணையதளத்தை தொடங்க உள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ், “ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற மாணவர்கள் காவலர்களால் பயங்கரமாக தாக்கப்பட்டனர். சில பெண் போராட்டக்காரர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். இந்த விவகாரத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அனைத்தையும் நினைவில் கொள்வோம்.

மாணவர்களை தாக்கிய, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த காவலர்களை அடையாளம் காண புதிய இணையதளம் தொடங்க உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் தாக்குதல் நடத்திய, பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர்கள், அதிகாரிகளின் புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை இணையதளத்தில் பதிவேற்றுங்கள்.

அடையாளம் காணப்படும் காவலர்கள், அதிகாரிகள் மீது டெல்லி காவல் துறை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்துவோம். அவ்வாறு செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடி, வழக்கு பதிவு செய்வதற்கான உத்தரவை பெறுவோம். உரிய நேரம் வரும்போது தாக்குதல் நடத்திய, பாலியல் துன்புறுத்தல் தந்த காவலர்கள், அதிகாரிகள் சிறைக்கு செல்வதை உறுதி செய்வோம். இது எங்கள் வாக்குறுதி” என்று தெரிவித்தார்.

Tags : CJP ,New Delhi ,Union Education Minister ,Dharmendra Pradhan ,Union government… ,
× RELATED டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது...