புதுடெல்லி: நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் அதைத் தொடர்ந்து மோடி அரசு மேற்கொண்டுள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கண்டித்து, இன்று மாலை நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மெழுகுவர்த்திப் பேரணி மற்றும் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்துமாறு காங்கிரஸ் கட்சி தனது மாநிலப் பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கட்சியின் அமைப்புப் பொறுப்புப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ ஒவ்வொரு பேரணியும் மகாத்மா காந்தி அல்லது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் சிலையை நோக்கிச் சென்று, அங்கு நிறைவடைய வேண்டும். தேர்வுகளின் நம்பகத்தன்மை முழுமையாகச் சீர்குலைந்ததற்கும், நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்ததற்கும் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் நாம் திட்டவட்டமாக வலியுறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
