புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கியதில் இருந்து மாநிலங்களவையில் குறிப்பிடத்தக்க எந்த அலுவல் பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நேற்று அவை தொடங்கியதும் மாநிலங்களவை அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பிற்பகல் 2மணிக்கு அவை கூடியபோது தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா 2026-ஐ அறிமுகம் செய்யுமாறு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராயை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கேட்டுக்கொண்டார். இந்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கு குறிப்பாக இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் குரல் வாக்கெடுப்புக்கு பின் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
மசோதா மீதான விவாதத்தை தொடங்குவதற்கு அவைத் தலைவர் கேட்டுக்கொண்டபோது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையும் ஐந்தாவது நாளாக முடங்கியது. முன்னதாக அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பகல் 12மணிக்கு அவை கூடியது. அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து அணுகி வருகிறேன்.
பல எதிர்க்கட்சி எம்பிக்கள் விவாதம் நடைபெற வேண்டும் என்ற கருத்தை கொண்டு இருந்தாலும், விவாதத்தின் அவசியத்தை ராகுல்காந்தி தனது கட்சி உறுப்பினர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விவாதத்துக்கு முன்பாக சாக்குப்போக்குகளை கூறுவதும், நிபந்தனைகளை விதிப்பதும் நாட்டிற்கு தவறான செய்தியை அளிக்கும் என்று கூறினார்.
எனினும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். ராகுல்காந்தி பேச விரும்பியபோது அவைக்கு தலைமை தாங்கிய ஜகதாம்பிகா பால் ஆவணங்களை அமைச்சர் சமர்ப்பித்த பின் வாய்ப்பளிப்பதாக தெரிவித்தார். ஆனால் தொடர் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
* எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்
கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் எம்பிக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
* அரசுடன் எந்த பேச்சும் இல்லை
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ”காங்கிரஸ் எம்பிக்களை விவாதத்தை தொடங்கச் சொல்லி மக்களவையில் அமைச்சர் ரிஜ்ஜூ அறிக்கையை வெளியிட்டார். ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும்போது சம்பந்தப்பட்ட நபர் பதிலளிக்கக் கோருவது இயல்பான ஒன்று.
ஆனால் ரிஜ்ஜூவின் கருத்துக்கு பதிலளிப்பதற்கு நான் எழுந்தபோது எனக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. எனது மைக் அணைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைப்பதற்கு நான் விரும்பினேன். அமைச்சர் பிரதான் பதவி நீக்கம் செய்யப்படும் வரை நாங்கள் எந்த பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்போவதில்லை” என்றார்.
