நன்றி குங்குமம் தோழி
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த விதுஷி தீக்ஷா. இவர் 216 மணி நேரம் (தொடர்ச்சியாக 9 நாட்கள்) நடனமாடி, மிக நீண்ட நேரம் பரதநாட்டியம் ஆடியதற்கான உலக சாதனையை படைத்துள்ளார். மங்களூரைச் சேர்ந்த ரெமோனா எவெட் பெரேரா 170 மணி நேரம் தொடர்ந்து நடனமாடிய சாதனையை விதுஷி தீக்ஷா முறியடித்துள்ளார்.உடுப்பி பிரம்மாவர் அருகே உள்ள ஆரூரைச் சேர்ந்த 24 வயதாகும் விதுஷி தற்போது ‘பி.எட்’ படித்து வருகிறார்.
தொடர்ந்து ஒன்பது பகல்களும் ஒன்பது இரவுகளும், கர்நாடக மாநிலம் உடுப்பி, அஜ்ஜரகாடு பகுதியில் உள்ள டாக்டர் ஜி.சங்கர் அரசு மகளிர் முதல் நிலைக் கல்லூரி அரங்கத்தில், முழு நம்பிக்கையுடன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 21 முதல் 30 வரை தன்னுடைய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்பது இந்த சாதனைக்கான விதிமுறை. அதை பின்பற்றி 216 மணி நேரம் விதுஷி நடனமாடினார். ஒன்பதாவது நாளில் பிற்பகல் 3:30 மணிக்கு தனது நிகழ்ச்சியை நிறைவு செய்த போது, விதுஷி தளர்ந்து துவண்டு போயிருந்தாலும், தனது பெயரை Golden Book of World Recordsல் பதித்துள்ளார்.
‘‘பரத நாட்டிய நிகழ்ச்சியில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று எனக்குள் தோன்றவில்லை. அது பல ஆண்டு காலம் என்னுள் விருட்சமாக வளர்ந்து வந்தது. இந்த சாதனை செய்யும் போது, நடனமாடும் போது அதனால் ஏற்படும் சிரமங்களை என் உடல் எவ்வளவு தூரம் பொறுத்துக்க கொள்ளச் செய்யும் என்று என்னை நானே கேட்கத் தொடங்கினேன்.இந்த சாதனை முயற்சி வெறும் சகிப்புத்தன்மை குறித்தான சோதனை மட்டும் அல்ல… முழுமையான சரணாகதி என்று தான் சொல்ல வேண்டும். தெரிந்தவர்கள் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடனமாடுவது கற்பனைக்கே எட்டாத ஒன்று. இதற்காக உடல் மற்றும் மன ரீதியாக பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்கள். உடல் மற்றும் மன சிரமங்களை எவ்வாறு எதிர்கொள்வது குறித்த ஆய்வில் ஈடுபட்டேன்.
அதற்கு பல ஆண்டுகள் நான் எடுத்த நடனப் பயிற்சி எனக்கு கை கொடுத்தது. நீண்ட நேரம் உடல் உபாதைகளை தாங்கும் திறன், ஆடுவதால் ஏற்படும் கால் வீக்கம், வெடிப்புகள், ரத்தக்கசிவு மற்றும் காயம் ஏற்படாமல் எவ்வாறு பாதுகாப்பது என்று கவனத்தில் கொள்ள ஆரம்பித்தேன். மேலும், சுவாசக் கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்தினேன். அடுத்து குறுகிய ஓய்வு நேரத்தில் சோர்ந்த உடலை மீட்டெடுப்பதும் எனக்கு சவாலாக இருந்தது. இந்த சிரமங்களை எதிர் கொள்ள தியானம், மௌனம், மூச்சுப் பயிற்சிகளை நீண்ட நேரம் மேற்கொண்டேன். வலி தற்காலிகமானது. ஆனால், நோக்கம் மகத்தானது என்பதை எனக்குள் நினைவூட்டிக் கொண்டேயிருந்தேன். முக்கியமாக நாட்கள் மற்றும் நேரத்தை கணக்கிடுவதை நிறுத்திவிட்டேன். ஒரு அடவு, ஒரு ஜதி, ஒரு பாவனை என நடன நிகழ்ச்சி இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். அதன் மூலம் நான் சோர்வு அடையாமல் ஒன்பது நாட்களும் ஃப்ரெஷ்ஷாக இருப்பது போல் என்னை தயார்படுத்தினேன்.
ஒன்பது நாட்களும் சவாலான தருணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். உடல் சார்ந்தவையாக மட்டுமில்லை. என் கால்கள் நடுங்கிய நேரங்களும், முதுகு வலித்த போதும், சோர்வு சுமையாக மாறிய தருணங்களையும் நான் சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால், உண்மையான சவால், அமைதியான நடுநிசி நேரங்களில் எழுந்தது. அந்த நேரத்தில் அரங்கத்தில் பார்வையாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இரவு நேரம் என்பதால் அமைதியாக இருக்கும். அப்போது “நான் ஏன் இதை செய்கிறேன்?” என்று மனம் ஒரு பக்கம் கேள்வி கேட்கத் தொடங்கும். அதற்கான பதில் பரதம் ஒரு பிரார்த்தனை, தவம் என்று நினைவுபடுத்திக் கொண்டேன். உடல் கைவிட்ட தருணங்களில், ஆன்மா பொறுப்பேற்றுக் கொண்டது.
மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கிடைக்கும் 15 நிமிட ஓய்வை மிகவும் கவனமாக பயன்படுத்தினேன். அந்த 15 நிமிடங்கள் மிகவும் விலை மதிப்பற்றவை. நீர்ச்சத்து, இலகுவான உணவு, உடலை
மீட்டெடுக்கும் பயிற்சிகள் மற்றும் சுவாசத்தை சமநிலைப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தினேன். கவனச் சிதறலுக்கு இடமே தரவில்லை. என் குருமார்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மருத்துவக்குழு, தன்னார்வலர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் என்று அனைவரும் எனக்கு தைரியம், நம்பிக்கை சேர்த்தனர். இந்த சாதனையின் பெருமை என்னை மட்டும் வந்து சேர்ந்தாலும், அது ஒருபோதும் எனது தனிப்பட்ட பயணம் அல்ல.
இந்த சாகச சாதனை நிகழ்ச்சி மூலம் நான் சொல்ல நினைப்பது ஒன்றுதான். நம்பிக்கை இருந்தால் மலைகளைக் கூட நகர்த்த முடியும். பெண்களாகிய நாம், நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறப்படுகிறது. ஆனால், எந்தப் பயணத்திலும், பெண்ணின் மன வலிமை லட்சியத்துடன் இணைந்தால் அது அசாதாரணமானதாக மாறும் என்பதை எனக்கு அனுபவம் கற்றுக் கொடுத்தது. இந்தச் சாதனை முடிவு அல்ல… தொடக்கம்தான். விரைவில் என்னுடைய சாதனையையே உடைக்க வேண்டும்’’ என்றார் விதுஷி தீக்ஷா.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி
