நன்றி குங்குமம் தோழி
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண், ஒரு சின்னஅறையில் அமர்ந்து கொண்டே, தங்கள் வீட்டு வேலைகளுக்கு நடுவே, இரண்டே மணி நேரத்தில் 150 ஆன்லைன் ஆர்டர்களை, தன் கையடக்க மொபைலில் எப்படி ப்ராசஸ் செய்யுறாங்க?
ஈ காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலமாக, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை எப்படி கட்டி எழுப்புறாங்க?விரிவாகப் பார்க்கலாம் வாங்க.பெண்கள் இவற்றை சாத்தியப்படுத்தவும், லட்சங்களில் சம்பாதிக்கவும், பெரிய ஐடி பார்க்கோ, பிரம்மாண்ட அலுவலகமோ தேவையில்லை என்பதையே இன்றைய டிஜிட்டல் உலகம் தெளிவாய் நமக்கு காட்டுகிறது.ஈ காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் தொழில் செய்வதை, வழிகாட்டியாய் இருந்து, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக,‘தமிழ் ஈ காமர்ஸ்’ மற்றும் ‘மிஸ்டர் ஜெபஸ்டீன்’ யு டியூப் தளங்களில் வெளியிட்டு, பெண்கள் பலரையும் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றி வருபவர் பிடெக். எம்பிஏ. பட்டதாரியான ஜெபஸ்டீன். அவரிடம் பேசியதில்…
‘‘கிட்டத்தட்ட 80% பெண்கள் ஈ காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிசினஸில் இன்று இருக்கிறார்கள். காரணம், ஒரு ஆண் கல்லூரி படிப்பை முடித்ததுமே, குடும்பத்தின் அடுத்தகட்ட அழுத்தம், “எப்போது வேலைக்கு போவ? எப்போது சம்பாதிப்ப?” என்பதே. இதனால் இளைஞர்கள் டீ கடை அல்லது காஃபி ஷாப் மாதிரியான ஏற்கனவே செட்டான பிரான்சைஸி மாடல்களை தேடுகிறார்கள். அவர்களால் புதிதாக ஒரு பிராண்டை உருவாக்கி கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க நேரம் இருப்பதில்லை.
ஆனால், பெண்களுக்கு உடனே சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி இல்லை. அவர்களின் கணவர் நல்ல வேலையில் இருக்கலாம். அல்லது வீட்டில் பணக்கஷ்டம் இல்லாமலும் இருக்கலாம். ஆனாலும், அவர்களுக்குள் ஒரு பெரிய மனப்போராட்டம் ஓடிக்கொண்டே இருக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டு படித்தும், நமது திறமை வீணாகுதே என்கிற குமுறலோடு, வலுவான தேடல் அவர்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
இந்தத் தேடலே அவர்களை எனது ஈ காமர்ஸ் வழிகாட்டுதல் தளம் வரை கொண்டு வந்து சேர்க்கிறது’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.‘‘ஈ காமர்ஸ் என்பது, Amazon, flipkart மாதிரியான தேர்ட் பார்ட்டி வெப்சைட்களில் நமது பொருட்களை லிஸ்ட் செய்து விற்பது. உதாரணத்திற்கு, அடுத்தவர் கட்டிய மாலில், ஒரு சின்ன கடையினை வாடகைக்கு எடுப்பதுபோல். அந்த மாலுக்குள் வருகிற கூட்டம், தேவைப்பட்டால் நம் பொருளை வாங்கலாம். இதற்கென ஒரு பெரும் தொகையை பிளாட்ஃபார்ம் கட்டணமாக அந்நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். கூடவே விற்பனையில் கமிஷனும் உண்டு.
ஆனால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது, நமக்கென சொந்தமாக ஒரு இன்ஸ்டா, Facebook, YouTube பக்கங்களைத் தொடங்கி, நாமே நமக்கான பிராண்டை உருவாக்குவது. இதில் நாம் விற்பனை செய்கிற பொருள், அதற்கான விளம்பரம், வாடிக்கையாளர்களின் நேரடித் தொடர்பு என எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள். நமக்கென ஓனர்ஷிப் இதில் கிடைக்கும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வழியாக தொழில் செய்ய 10,000 அல்லது 20,000 இருந்தாலே போதுமானது. இந்த மாடலின் மிகப்பெரிய பலமே குறைவான முதலீடுதான். இந்த முதலீடும் நாம் விற்கப் போகிற பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
குறைவான முதலீடுஎன்றாலும், பொருட்களை கேட்டலாக் செய்வது, லிஸ்டிங் செய்வது, இன்ஷாட்… கேப் கட் மாதிரியான செயலிகள் வழியே எடிட்டிங், வாய்ஸ் ஓவர், டி.எம், தம்ப்னெயில், டாக்குமென்டேஷன், ஜிஎஸ்டி ரெஜிஸ்ட்ரேஷன் என டெக்னிக்கல் விஷயங்கள் இதில் ஏராளம். இந்த டெக்னிக்கல் விஷயங்களுக்கான சப்போர்ட்டை நாங்கள் முழுமையாக வழங்குகிறோம்.
ஆம், டெக்னாலஜி என்பது அச்சுறுத்தும் விஷயமில்லை. பழகப் பழக வசப்படுகிற டூல்தான் என்பதை பெண்கள் உணர தொடங்குகிறார்கள். இதில் பெண்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு, எங்கள் வாட்ஸப் குரூப் வழியாகவே உடனுக்குடன் விளக்கமும் தரப்படும். எங்கள் டீமின் உதவியோடு இணைந்து, ஒருசில மாதங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வெளியில் அவர்கள் பயணிக்கும்போதே, டெக்னாலஜி பழகிவிடுகிறது.
அதன் பிறகு தினமும் 200 ரூபாய் செலவு செய்து, மெட்டாவில் எப்படி விளம்பரம் ரன் செய்வது, கூகுள் வழியாக எப்படி விளம்பரம் செய்வது என்பதை எல்லாம் கற்றுத் தருகிறோம். இங்குதான் மெட்டாவின் அல்காரிதம் மாயாஜாலம் புரிவதை அவர்கள் உணர்வார்கள். ஆம்! மெட்டா ரொம்பவே ஸ்மார்ட். இது நம்முடைய ஆன்லைன் தேடல்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கும்.
இணையத்தில் இமிடேஷன் ஜுவல்லரி, கிச்சன் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், உடைகளை வாடிக்கையாளர்கள் தேடும்போதே மெட்டா நோட் செய்து, குறிப்பிட்ட பொருளை தேடிய நபரின் கைபேசிக்கு துல்லியமாய் அதனைக் கொண்டு சேர்க்கும். யாருக்கு எது தேவையோ, அவர்களை குறி வைத்து அடிக்கிற ஸ்நாப் ஷாட் வேலையை கச்சிதமாய் மெட்டா செய்யும்.
பொருளை வாங்காமல் கஸ்டமர் ஸ்கிப் செய்தாலும் மெட்டா அவர்களை விடாது கருப்பாய் விடாமல் பின் தொடரும். அடுத்த சில நாட்களுக்கு அவர் எந்த பக்கத்தை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் அதே விளம்பரத்தை திணித்து, கன்வின்ஸ் செய்கிற தந்திரத்தைக் கையாள்வதில் படு கெட்டி. இதுவே டிஜிட்டல் உலகில் ரீடார்கெட்டிங் மெத்தெட். இதனை எப்படி செய்வது என்பதையும் நாங்கள் கற்றுத் தருகிறோம்.
எந்தவொரு வாடிக்கையாளரும், தன் பணத்தை, பெரிய பிராண்டிங்கும் இல்லாத நபரின் ஆன்லைன் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப ரொம்பவே யோசிப்பார். குறிப்பிட்ட பொருளை அவர் நம்புகிறாரோ இல்லையோ? விற்கும் நபரை முதலில் அவர் நம்ப வேண்டும். இதற்காகவே முகத்தைக்காட்டி காணொளிகளை வெளியிட வலியுறுத்துகிறோம். இதற்குத் தயங்கும் பெண்களை, பொருட்களை பேக் செய்கின்ற, அன்பாக்ஸ் செய்கின்ற வீடியோக்களை எடுக்கவைத்து, வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுத்து வெளியிட முதலில் அறிவுறுத்துவோம்.
தொடர்ந்து 20 வீடியோக்களுக்கு மேல் வாய்ஸ் ஓவர் செய்யும்போதே, அவர்களின் குரலில் தன்னம்பிக்கையும் கம்பீரமும் தானாக வருகிறது. அதன் பிறகே முகம் காட்ட தொடங்குவர். இந்த நிலையில்தான், பார்வையாளர்கள்(Views) எண்ணிக்கை அவர்களுக்கு உயரும். ஒரே நாளில் 150க்கும் மேற்பட்ட ஆர்டர்கள், குறுஞ் செய்திகளாகவும் வரத் தொடங்கும்.
இந்தப் புள்ளியே பெண்கள் வியாபாரத் தில் மிகப்பெரிய திருப்புமுனை. அதுவரை வியாபாரியாக மட்டுமே இருந்த பெண்கள், தொழில்முனைவோராக, ஒரு பிராண்டாக தங்களை தாங்களே மெருகேற்றுவர். இதன் பிறகே சொந்தமாக வெப்சைட் தொடங்க அறிவுறுத்துவதுடன், வெப்சைட் டெவலப்பர்களையும் நாங்களே அறிமுகப்படுத்தி தருகிறோம்.
ஒரு சின்ன வாட்ஸப் குரூப்பில் தொடங்கிய பெண்களின் வியாபாரம், படிப்படியாக வளர்ந்து, ஈ காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என விரிந்து, முழுமையான வெப்சைட் பிசினஸ் மாடலாக உருவெடுத்ததில், கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டுமே தோராயமா 500க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறிஉள்ளார்கள்.
குடும்ப பொறுப்புகளுக்கு மத்தியில், முடங்கிக் கிடந்த தங்கள் கல்விக்கும், திறமைக்கும் சிறகு முளைக்க செய்கிற ஆயுதமே இந்த டிஜிட்டல் மார்கெட்டிங். நாம் வாழுகிற இந்த உலகத்தில் 99 சதவிகிதமும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாறியாச்சு. ஒரு தொழில்முனைவோராக நீங்களும் டிஜிட்டல் பிசினஸுக்குள் இல்லையெனில், பிசினஸுக்குள் நீங்கள் இல்லை’’ என்றவாறு விடைபெற்றார்.
டெக்னாலஜி என்பது அச்சுறுத்தும் விஷயமில்லை… பழகப்பழக வசப்படுகிற ஒரு டூல்தான்!
‘‘என் கல்லூரி புராஜக்டிற்காக 2016ல் அமேசான், ஃபிளிப்காட் தளங்களில் ஈ காமர்ஸ் பிசினஸ் தொடங்க துலாவியதில் அதற்கான வழிகாட்டுதல் அப்போது இணையத்தில் கிடைக்கவில்லை. முட்டி மோதியே கற்றுக் கொண்டேன். அப்போதே இதில் 50 ஆயிரம் சம்பாதித்து, கல்லூரி புராஜக்டை தரவுகளோடு சமர்ப்பித்தேன். அதன் பிறகே யு டியூப் சேனல்கள் பூம் ஆனது.
நமக்கு தெரிந்த கன்டென்ட் குறித்து பேசி யு டியூப் தளத்தில் வீடியோ வெளியிட்டால் பணம் கிடைக்கும் என்பது மட்டுமே எனக்கு அப்போது தெரியும். என்ன மாதிரி கன்டென்ட் என யோசித்ததில், எனக்கு நன்கு தெரிந்த.. பரிச்சயமான… ஈ காமர்ஸ் பிசினஸ் குறித்த எஜுகேஷன் வீடியோக்களை 2017ல் இருந்தே அப்லோட் செய்யத் தொடங்கினேன்.முதலில் கமென்ட்ஸ் வரத் தொடங்கி, ஈ காமர்ஸ் தொடங்குவது குறித்து கேள்விகளும் அதிகம் வர ஆரம்பித்தன. கேள்விக்கான பதில்களையும் வீடியோவாக்கி அப்லோட் செய்ததில், வரவேற்பு அதிகமாகவே, எனது யு டியூப் தளத்தை புரொபஷனலாக மாற்றினேன்.
தொடங்கும்போது ஈ காமர்ஸ், அதன் பிறகே டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான வீடியோக்களையும் போட ஆரம்பித்தேன். இன்று எனக்கு சுமார் 3.8 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள். எனது அலுவலகம் சென்னை போரூரில் செயல்படுகிறது. 12 பேர் கொண்ட குழு என்னிடம் இதற்கென இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுகிற சப்போர்ட் சிஸ்டமாக இவர்கள் செயல்படுகிறார்கள்.’’
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
