நன்றி குங்குமம் தோழி
டெக்னாலஜி எவ்வளவு மாறினாலும் எந்த ஃபார்மெட்டுக்கு வந்தாலும், நல்ல கதைகளுக்கான மனிதர்களின் தேடல் எப்பவுமே குறையாது. ஒரு சின்ன திரைக்குள் இரண்டரை நிமிஷத்தில்
கூட, ஒரு பெரிய வாழ்வியல் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது கதை சொல்லும் கலையோட அடுத்தகட்ட பாய்ச்சல்தான்.சமூக வலைத்தளங்களில், முக்கியமாய் Insta, You tube என தொடர்ந்து நாம் ஸ்க்ரால் செய்யும்போது, எந்தவொன்றையும் முழுதாய் பார்ப்பதில்லை. நமது கவன ஈர்ப்பு குறைந்ததே இதற்குக் காரணம். அப்படி மணிக்கணக்காய் ஸ்க்ரால் செய்கிற 2 நிமிட ரீல்ஸ் வடிவத்திலேயே, ஒரு முழு சீரிஸையும் பார்த்தால் எப்படி இருக்கும்?
ஆம்! வெர்டிகல் டிராமா எனும் மைக்ரோ சீரிஸ் புது கான்செப்ட் டெக்னாலஜியை மட்டுமில்ல, கதை கூறும் கலையையும் தலைகீழாய் புரட்டி போட்டுள்ளது. பல வருடமாக நம் வீடுகளுக்குள் இருந்த ஒரு ஸ்ட்ரக்சரை இரண்டரை நிமிஷ வெர்டிகல் டிராமா வீடியோ உடைச்சிருப்பது சாதாரண விஷயம் கிடையாது.மைக்ரோ சீரிஸ் உலகம் முழுக்க இன்று பல்வேறு நாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநருமான கீதா இளங்கோவன் இயக்கத்தில், எழுத்தாளர் கமலி பன்னீர் செல்வம் இணைந்து கதை எழுத, தமிழில் அறிமுகமாகி இருக்கும் கதை ஷாட்ஸ் செயலியில் வெளியாகியுள்ள ‘கூரைபல்லியும் கவிதாவும்’ நுண்தொடர் (Micro series) வெர்டிகல் டிராமா என்கிற புத்தம் புது வடிவமாகும். ஆம்! செங்குத்தான காணொளி வடிவில், மொபைல் போனில் பார்ப்பதற்கென உருவாக்கப்பட்ட ஃபார்மெட் இது. இனி ‘கூரைபல்லி’ கதைக்கு வருவோம்…
நான் இல்லைன்னா என் வீடும் என் அலுவலகமும் இயங்கவே இயங்காது. அப்படியே ஸ்தம்பித்து போயிடும்ன்னு நீங்க நினைச்சிருக்கீங்களா? அப்படீன்னா, உங்களுக்குள் ஆழமாய் உறைந்திருக்கும் அந்த மாயையை சுக்குநூறாய் உடைக்கும் ஒரு கதையின் அடிநாதமே ‘கூரைபல்லியும் கவிதாவும்.’ காலம் காலமாய், பெண்கள் மூளைக்குள் கவனமாய் ஏற்றப்பட்ட, குடும்பத்திற்கான தியாக பிம்பத்தை இரண்டே நிமிட அத்தியாயங்கள் கொண்ட, இக்குறுந்தொடர் உடைக்கிறது என்பதே இதில் புதுமை.
இரண்டே நிமிடத்தில், ஒரு பெண்ணின் அக உலகையும், அவளின் நுட்பமான உணர்வுகளையும், செயற்கை தனமின்றி, இந்த மைக்ரோ சீரிஸ் கொடுத்திருக்கிறது என்பதே இதில் ஆச்சரியமான விஷயம். இதுதான் இந்த படைப்பின் வெற்றியும். பக்கத்து வீட்டுப் பெண்ணின் கதையை பார்க்கிற யதார்த்த உணர்வை இது நமக்கு கொடுக்கிறது.கவிதா ஒரு நடுத்தர குடும்பத்து இல்லத்தரசி. கணவர், பிள்ளைகள், மாமனார் மற்றும் உடல் நலம் இல்லாத மாமியார் என ஒட்டுமொத்த பொறுப்பையும் தன் தோளில் சுமக்கிறார். நான் இல்லைன்னா இந்த குடும்பமே ஓடாது. எல்லாமே அப்படியே நின்னுடும் என்கிற தீவிர நம்பிக்கையில் ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கிறார். தன்னை முற்றிலும் மறந்து தன் குடும்பத்துக்காகவே வாழ்கிறார்.
சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணின் மதிப்பென்பது, அவள் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படுகிறாள் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். அவளுக்கான தனிப்பட்ட விருப்பங்கள், அவளின் கனவுகள் இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். தியாகம் என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு பின் ஒளிந்து, பெண்களின் உழைப்பை சுரண்டுவதுதான் இங்கிருக்கிற நுட்பமான அரசியல். கவிதாவும் இந்த வலையில் சிக்குண்டு இருக்கிறார். நான் இல்லைன்னா என் குடும்பம் இயங்காது என்கிற அவரின் எண்ணம் உண்மையிலேயே அவருக்கு கொடுக்கப்பட்ட போதைதான்.
கல்யாணம் முடிந்ததுமே, சீர்வரிசைகளோடு சேர்த்து தங்கள் திறமைகளையும் பரணில் தூக்கி போட்டுவிட்டு, சமையல் கட்டுக்குள் மட்டும் திறமையை காட்டினால் போதும் என்கிற சமூகத்தின் பொது சிந்தனையை கவிதாவும் ஆழமாக உள்வாங்கி வைத்திருக்கிறார்.ஒரு எதிர்பாராத விபத்தில் கவிதா கோமா நிலைக்கு செல்ல, யதார்த்தம் அவரை ஓங்கி அறைகிறது. கவிதா இல்லாத வாழ்க்கைக்கு குடும்பத்தினர் பழகி, தங்கள் வாழ்க்கையை நகர்த்த தொடங்கிவிடுகிறார்கள். வீட்டில் யாரோ ஒருவர் சமைக்கிறார். யாரோ ஒருவர் வீட்டை பராமரிக்கிறார். மாமியாரை கவனிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோமாவில் இருந்து மீண்டு வரும் கவிதாவுக்கு, இதெல்லாம் அதிர்ச்சியை தர, நான் இல்லாமலும் என் குடும்பம் இயங்கும் என்கிற நிதர்சனத்தை எதிர்கொள்கிறார்.
அதாவது, ஒரு வீட்டின் மேற்கூரையில் ஒட்டியுள்ள பல்லி, நான்தான் இந்த ஒட்டுமொத்த கூரையையும் தாங்கிப் பிடித்திருக்கிறேன். நான் பிடியை விட்டால், கூரையே இடிந்து கீழே விழுந்துவிடும் என்கிற பெருமிதத்தோடு இருக்குமாம். விபத்தில் பல்லி கீழே விழுந்த பிறகே, நான் இல்லாமலே கூரை நிற்குது என்பதை உணருமாம். இதே மாயையில் வாழும் கவிதா மாதிரியான கோடிக்கணக்கான இல்லத்தரசிகளின் மனநிலையை இந்த தலைப்பு மிக துல்லியமாய் காட்டுகிறது.
‘நீ இல்லையென்றாலும் மாற்று இருக்கென’ புத்தியில் உறைப்பது ஒரு வகையில் அவங்களுக்கு கிடைத்த மாபெரும் விடுதலை. நான் ஒரு நல்ல அம்மா… நல்ல மனைவி… நல்ல மருமகள் என்கிற வட்டத்துக்குள் பெண்கள் தங்களை சுருக்குகிறார்கள். இதில் ஏதோ ஒன்றில் சின்ன குறை ஏற்பட்டாலும், பெரிய பாவத்தை செய்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். இத்தனை வருடமாக பிறருக்காகவே வாழ்ந்த கவிதா, தனக்கான அடையாளத்தை தேடி மீண்டெழும் பயணத்தில், இசை முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லூரியில் அவர் படித்தபோது நேசித்த, திருமணத்திற்குப் பிறகு மறந்து போன இசையை மீண்டும் கையில் எடுக்கிறார். மீண்டும் அவர் பாடும் போது, முதலில் தடுமாறி, மெதுவாகக் கற்று, இறுதியில் மேடை ஏறுகிறார். அந்தத் தருணம் அவருக்கான சிம்மாசனமாக மாறுகிறது.
குடும்பத்தின் அத்தனை பிரச்னைகளையும் தலைக்குள் ஏற்றி, தங்களை மறந்துபோன பெண்களுக்கு இதுவொரு முக்கிய பாடம். அதேசமயம் இது பெண்களுக்கான தொடர் மட்டுமில்லை… பெண்களை மெஷினாய் பார்க்கும் ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டிய ஆழமான படைப்பு.பெண்கள் தங்களை நேசிப்பதும், தன் மீதான காதலை வளர்த்துக் கொள்வதும், தங்களுக்கான தனித்துவத்தை முன்னிறுத்துவதும் சுயநலம் இல்லை என்பதை, எந்தவித வறட்டு உபதேசமும் இன்றி, அழகாய் உணர்த்தும் மைக்ரோ தொடர் இது.
இசையமைப்பாளர் அனிவி மற்றும் பாடலாசிரியர் உமாதேவியின் பங்களிப்பும் இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக உமாதேவி எழுதிய இரண்டு பாடல்கள் கவிதாவின் உணர்ச்சிப் பயணத்தில் முக்கிய மயில்கல்லாய் அமைவதுடன், தனக்கான அடையாளத்தை கண்டுபிடிக்கும், பெண்ணின் உள்ளார்ந்த மாற்றத்தின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறது. தன் சுதந்திரத்தை நோக்கிய பயணமே சுய அன்பின் முதல் படி என்பதை கதை நமக்கு உணர்த்துகிறது.
வெர்டிகல் டிராமா கான்செப்ட்
பல நூறு பேர் ஒன்றாய் இணைந்து இருட்டறையில், அகலமான ஸ்கிரீனில் பார்த்து ரசிச்ச கதைகள் இன்றைக்கு அப்படியே சுருங்கி செங்குத்தாய் நம் உள்ளங் கைக்குள் வந்தாச்சு.
மிகப்பெரிய வெப் சீரிஸ் பார்க்க டிவி அல்லது லேப்டாப் வேண்டும். அதற்கென நேரம் ஒதுக்கணும். ஆனால், சோபாவில் படுத்தோ அல்லது சமைத்தபடியோ, ஒரு கையில் மொபைலை வைத்து வெர்டிகலாய் பார்க்க, இப்போது வருகிற ஷாட்ஸ் ஃபார்மெட் வசதியாக இருக்கிறது. இந்த தேவையில உருவானதே வெர் டிகல் டிராமா மைக்ரோ சீரிஸ்.
ஏதோ சாதாரணமா மொபைல் போனை கையில் வைத்து, கேஷுவலாக எடுக்கும் வீடியோ கிடையாது இது. சினிமாவுக்கு பயன்படுத்துகிற உயர்தர கேமராக்களை செங்குத்தாக வைத்து
படமாக்குவதுடன், லைட்டிங் பிரேமிங் அனைத்துமே, இந்த வெர்டிகல் ஸ்கிரீனுக்காகவே பிரத்யேகமா டிசைன் செய்யப்படுவதோடு, தரத்தில் எந்த சமரசமும் இல்லை.
எபிசோட் ஒவ்வொன்றையும் இரண்டரை நிமிஷம் என கணக்கிட்டால், மொத்தம் ஒன்றரை மணி நேர கன்டென்ட் வரும். ஒரு முழுநீள படத்தின் நேரமிது.
இப்போ சீனாவுல இந்த ட்ரெண்ட் ரொம்பவே ஹிட். இது அப்படியே கொரியாவுக்கும் பரவி, கொரியன் டிராமாக்கள் எனப்படும் கே டிராமாஸ் ஏற்கனவே ஹிட்டடித்த நிலையில், மைக்ரோ சீரிஸ்க்கும் மாறிய நிலையில், குளோபல் ட்ரெண்டாகவும் இப்ப மாறிடுச்சு. இன்றைக்கு உலகம் முழுக்க வெர்டிகல் டிராமா பெரிய அலைகளை உருவாக்கி இருப்பதுடன், இதற்கென பிரத்யேக செயலிகளும் வந்தாச்சு.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலின்னு அஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, ஆங்கில சப் டைட்டில்களுடன் வருவதால், பேன் இந்தியா ரீச்சும் இதற்குண்டு. உலகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த மூலையில் இருந்தும் இந்தக் கதைகளை பார்க்க முடியும். தியேட்டரில் அமர்ந்து 3 மணி நேரம் பிரம்மாண்ட படங்களை பார்த்த நாம், சின்ன ஸ்கிரீனுக்குள் எப்படி மாறினோம்? அதுவும் செங்குத்தான பார்வைக்கு.
இதன் ஆரம்ப புள்ளியை அறிய, கோவிட் லாக்டவுன் காலத்திற்கு நாம் போக வேண்டும்.ஆம்! உலகமே வீட்டுக்குள் முடங்கிய அந்த நேரம், மனிதர்களுக்கு இருந்த ஒரே ஜன்னல் மொபைல் போன்தான். அந்த நேரத்தில் இரண்டு விஷயம் நடந்தது. ஒன்று மக்கள் தொடர்ந்து போனை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். இன்னொன்று வீடியோவில் அவர்களின் கவனம் செலுத்தும் நேரம் குறைந்தது. விளைவு 2 நிமிடம் ஒரு வீடியோவைப் பார்க்க பொறுமையின்றி தொடர்ந்து ஸ்க்ரோல் செய்யத் தொடங்கினர்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
