உடலுக்கும் மனசுக்கும் உற்சாகம் தரும் ZUMBA

நன்றி குங்குமம் தோழி

ஒருவரின் உடலமைப்பை திருமணத்திற்கு முன்… பின் என பிரிக்கலாம். கல்யாணத்திற்கு முன்பு தங்களின் உடலை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்ளும் பெண்கள், குழந்தைபேறுக்கு பின்னர் தங்கள் மேல் கவனமும் அக்கறையும் காட்டுவதில்லை. குடும்ப பொறுப்புகளை சுமக்க ஆரம்பித்தவுடன் அவர்களின் சொந்த நலனை பார்க்க தவறுகின்றனர். நேரம் தவறி உண்ணுதல், மீதமான சாப்பாட்டை உண்ணுதல், தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். விளைவு மன அழுத்தம். இந்தப் பிரச்னைக்கு ஜூம்பா நடனம் தீர்வளிக்கும் என்கிறார் ZIN பிரியா என்கிற சண்முகப்பிரியா. இவர் உலகளவில் சான்றிதழ் பெற்ற ஜூம்பா நடனப் பயிற்சியாளர். ஜூம்பா நடனம் குறித்தும் அதன் நன்மைகள் மற்றும் பயிற்சி முறைகள் குறித்து கேட்ட போது…

‘‘நான் தஞ்சாவூர் பொண்ணு. திருமணத்திற்கு பின் சென்னையில் செட்டிலாயிட்டோம். பிரபல தனியார் கார்ப்பரேட் கம்பெனியில் மனிதவளத்துறை மேலாளராக பத்து வருடங்களாக பணிபுரிகிறேன். சின்ன வயசுலயிருந்து டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும். அதைவிட நடனம் சொல்லித்தர ரொம்ப பிடிக்கும். எங்க ஸ்கூல், காலேஜ்லாம் நடன நிகழ்ச்சிகளில் எல்லோருக்கும் நான்தான் டான்ஸ் சொல்லித் தருவேன். எங்க ஊரில எல்லோரும் பாரம்பரிய நடனத்தைதான் விரும்புவாங்க. மேற்கத்திய நடனத்தை விரும்ப மாட்டாங்க.

அதனால என்னுடைய நடனத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போக முடியல. கல்யாணமாகி சென்னைக்கு வந்த பிறகு எங்க அப்பார்ட்மென்ட்ல நிகழ்ச்சிகள் நடத்துனாங்க. அதுக்கெல்லாம் நான்தான் கொரியோகிராபி செய்வேன். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி என் நடனத் திறனை வளர்த்துக் கொண்டேன்’’ என்று உற்சாகத்துடன் பகிர்ந்தவர் ZIN பிரியா ஆனதைப் பற்றி விவரித்தார்.

‘‘2019ல் கொரோனா காலத்தில்தான் என் ஜூம்பா கேரியர் தொடங்கியது. எல்லோரும் வீட்டில் இருந்து வேலை பார்த்ததால், நிறைய நேரம் கிடைத்தது. எங்க குடியிருப்பில் மட்டுமில்லாமல் அலுவலகத்தில் உள்ள பெண்களுக்கும் நடனம் சொல்லிக் கொடுத்தேன். அவர்கள்தான் என்னை ஜூம்பா நடனப் பயிற்சி மேற்கொள்ள சொன்னாங்க. குழந்தை பேறுக்கு பிறகு என்னுடைய எடையும் கூடினதால, ஜிம்மிற்கு சென்றேன். அங்கு வாரத்திற்கு ஒருநாள் ஜூம்பா பயிற்சி இருக்கும். அது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. எனக்கு ரொம்ப இன்ஸ்பயரிங்காக இருந்துச்சு. எங்க அப்பார்ட்மென்ட் பெண்களுக்கு ஜூம்பா வகுப்பு எடுத்தேன்.

அப்போது தான் ZIN பற்றி தெரிந்து கொண்டேன். ZIN என்றால் Zumba Instructor Networkனு அர்த்தம். அதில் சேர்ந்தேன். அதில் இந்தியா மற்றும் தமிழ்நாடு அம்பாசிடர் இருவரும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஆன்லைனில் வர்க் ஷாப் நடத்தினாங்க. அந்தப் பயிற்சியில் நான் இணைந்து ஜூம்பா பற்றியும் அதன் பல்வேறு நடன முறைகள் கற்றுக் கொண்டேன். அந்தப் பயிற்சி பெற்றதால், சர்வதேச ஜூம்பா பயிற்சியாளர் என்ற சான்றிதழுடன் கூடிய உரிமம் கிடைத்தது’’ என்றவர், ஜூம்பா பற்றி விரிவாக சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ஜூம்பா, ஏரோபிக்ஸ் மற்றும் அனைத்து நடனங்களின் கலவை. ஒட்டுமொத்த உடம்பு மற்றும் மனதின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். என்னோட கிளைன்ட்களுக்கு நான் சொல்றது ஒன்றுதான். உடம்பை குறைக்க மட்டுமே ஜூம்பாவுக்கு வராதீங்க. உங்களுக்கென்று தனிப்பட்ட ஒரு மணி நேரம் ஒதுக்கணும்னு வாங்க. அந்த ஒரு மணி நேரத்துல எல்லாவற்றையும் மறந்து நடனம் ஆடும் போது மனசு லேசாகிவிடும். உற்சாகமாக உணருவோம். சிலர் தங்களுக்கு நடனம் தெரியாதுன்னு வருத்தப்படுவாங்க.

ஆனால், மூன்று நாட்களிலேயே இயல்பாக ஆட ஆரம்பிச்சிடுவாங்க. நான் செய்வதை அப்படியே செய்ய வேண்டியதில்லை. நிற்கக் கூடாது. உடலை அசைத்தால் போதும். இப்படி உடல் முழுதும் அசையும் போது மெட்டபாலிசம் அதிகரித்து உடல் ஆரோக்கியம் மேம்பட்டு உடல், மனக் கோளாறுகள் எல்லாம் படிப்படியாக சரியாகும். ரிசல்டை கண்கூடாக பார்க்கலாம். முகப்பொலிவு வரும். தூக்கமின்மையால் அவதியுறுபவர்களுக்கு சிறந்த பலனை தரும். பெண்களுக்கு டெலிவரி மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் கார்ட்டிசால் என்ற ஸ்ட்ரஸ் ஹார்மோனால் வரும் மன அழுத்த பிரச்னை குறையும்’’ என்றவர், 16 வயதிலிருந்து 60 வயது வரை உள்ள பெண்கள் ஜூம்பா பயிற்சிக்கு வருவதாக கூறுகிறார்.

‘‘என்னிடம் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து துறையை சார்ந்தவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மருத்துவர் ஒருவர் உடல் பருமன், மன அழுத்தம், மகளிர் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு அவரிடம் வரும் நோயாளிகளுக்கு ஜூம்பா நடனத்தையே பரிந்துரைக்கிறார். ஜூம்பாவிற்கு தனியான பாடல்கள் உள்ளன. ஆனால், நான் தமிழ், இந்தி, மலையாளம் போன்று எல்லோருக்கும் தெரிந்த பாடல்களுக்கான நடனங்களையே சொல்லித் தருகிறேன்.

நமக்கு தெரிந்த பாடல்களுக்கு நடனம் ஆடும் போது நம்மை அறியாமல் மகிழ்ச்சி வரும். பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் சப்ஜா விதைகள் போட்ட குடிநீரை மட்டும் கொண்டு வர அறிவுறுத்துவேன். சிலர் திருமணத்திற்காக உடலை குறைக்கிறேன் என்று வருவார்கள். அவர்களுக்கு மட்டும் சில டயட் ஃபாலோ பண்ண சொல்வேன். தீவிர உணவுக் கட்டுப்பாடு தேவைப்படாது. சிறிது தூரம் வாக்கிங், லேட் நைட் சாப்பிடக் கூடாது, உணவில் புரோட்டீன், சரியான அளவு தண்ணீர் என்பது போன்ற ஈசி டூ ஃபாலோ டிப்ஸ்களை மட்டுமே வழங்குவேன். தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்யும் போது நிச்சயமாக உடலிலும் மனதிலும் ஒருங்கிணைந்த மாற்றத்தைக் காணலாம் என்றவர், இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

‘‘ஆரம்பத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாக எடுத்து வந்தேன். தற்போது நேரடி பயிற்சி அளிக்கறேன். சென்னை மட்டுமில்லாமல் வெளிநாட்டில் உள்ள என் வாடிக்கையாளர்களின் நண்பர்களுக்கு மட்டும் ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகிறேன். ஜூம்பா ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் அதற்கு கிளைகள் நிறுவ வேண்டும். அதற்கான பணிகளை செய்து வருகிறேன். தற்போது நிறைய டிரைனர்கள் வந்துவிட்டனர்.

யாராக இருந்தாலும் அவர்களுக்கு கிளைன்ட்ஸ் தரும் ஒத்துழைப்புதான் முக்கியம். நான் என் முப்பது வயதுக்கு பிறகுதான் எனக்கான விருப்பத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினேன். எல்லோருக்கும் விருப்பங்கள், கனவுகள் இருக்கும். வயது, சூழ்நிலையை காரணம் காட்டி ஒதுங்காமல் வாய்ப்பு வரும் போது அவரவர் இலக்கு நோக்கி முன்னெடுத்து வைக்க வேண்டும். உங்க உடலை கவனியுங்கள்… அது உங்க மனசையும் சேர்த்து பார்த்துக் கொள்ளும்’’ என்கிறார் ZIN பிரியா.

ராஜஸ்ரீ ஜூம்பா பயனாளர், சென்னை.

‘‘நான் ஐ.டி ஊழியர். தினமும் ஜூம்பா பயிற்சி செய்கிறேன். அந்த ஒரு மணி நேரத்தில் நடனத்துடன் பயிற்சி செய்யும் போது என் உடல் மற்றும் மனம் லேசாக இருப்பது போல் உணர்கிறேன். இன்றைய பயிற்சி என்பது நாளைக்கான உற்சாகத்தைத் தருகிறது. காலையில் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது. அதனால் எவ்வளவு வேலை இருந்தாலும் தவறாமல் பயிற்சிக்கு வந்து விடுவேன். எதையும் யோசிக்காமல் நான் ஜூம்பாவில் செலவிடும் நேரம் நல்ல பலனை தந்து உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர வைக்கிறது. உடல் பருமன் குறைந்து, நேர்மறை எண்ணங்கள் என்னுள் வளர ஜூம்பா உதவுகிறது.’’

தொகுப்பு: கலைச்செல்வி

 

Related Stories: