சித்தூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் பைக் விபத்தில் ஹெல்மெட் அணியாத 61 பேர் உயிரிழப்பு

*போக்குவரத்து விதிகளை பின்பற்ற எஸ்பி அட்வைஸ்

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் பைக் விபத்தில் ஹெல்மெட் அணியாத 61 பேர் உயிரிழந்தனர். எனவே அனைவரும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என எஸ்பி அறிவுறுத்தி உள்ளார்.சித்தூர் எஸ்பி துஷார் துடி நேற்று தெரிவித்ததாவது:

ஹெல்மெட் அணிவது அபராதங்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழி அல்ல, உயிர்களைக்காக்கும் ஒரு பாதுகாப்பு கவசம். ஹெல்மெட் அணிவது ஒரு பழக்கம் அல்ல, அது குடும்பத்தின் மீதான நமது பொறுப்பு. விபத்து என்பது சாலையில் ஒரு பைக் விழுவது மட்டுமல்ல, ஒரு முழு குடும்பமும் சாலையில் விழுகிறது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை கணிசமாக குறைக்க, ஒவ்வொரு இருசக்கர வாகன ஓட்டியும் தரமான ஐஎஸ்ஐ ஹெல்மெட் அணிய வேண்டும்.

ஜனவரி மாதம் முதல் ஹெல்மெட் அணியாததால் மாவட்டத்தில் மொத்தம் 106 விபத்துக்கள் நடந்துள்ளன. அவற்றில் 61 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர். ஒரு சாலை விபத்து எப்போது எங்கே எப்படி நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

இருப்பினும், விபத்து ஏற்படும்போது தலையில் ஏற்படும் கடுமையான காயங்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரே விஷயம் ஹெல்மெட் தான். சில நிமிடங்களுக்கு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது அருகிலுள்ள இடத்திற்கு செல்வதாக இருந்தாலும் சரி, தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வது உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இருசக்கர வாகன ஓட்டுநரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். தலைக்கவசம் அணியாமல் இருப்பது சட்ட மீறல் மட்டுமல்ல, அது குடும்பங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் ஒரு கவனக்குறைவான செயலும் ஆகும். சாலை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, சித்தூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து சிறப்பு சோதனைகளையும், வாகன ஆய்வுகளையும் நடத்தி வருகிறது.

அதே நேரத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தலைக்கவச பயன்பாடு குறித்த பிரசார நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பொதுமக்களுடன் நேரடி விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம், அனைவரிடமும் பொறுப்பான ஓட்டுநர் பழக்கத்தை ஏற்படுத்த அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தலைக்கவசம் வாங்குவது ஒரு செலவு அல்ல, அது குடும்பத்திற்கு அளிக்கும் பாதுகாப்பு. ஒரு சிறிய கவனக்குறைவு ஒருவரின் வாழ்நாள் முழுவதும் ஈடுசெய்ய முடியாத வலியை ஏற்படுத்தக்கூடும்.
வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே உங்களிடம் தலைக்கவசம் இருக்கிறதா? என்று கேட்டுக்கொள்ள வேண்டும். தலைக்கவசம் அணிவதை ஒரு பழக்கமாக கொள்ளுமாறு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும் குடும்ப உறுப்பினர்களையும் வலியுறுத்த வேண்டும்.

சாலைகளில் வேகத்தை விட பாதுகாப்பிற்கே இளைஞர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் உயிரையும் மற்றவர்களின் உயிரையும் காப்பாற்ற முடியும்.

அபராதங்களை தவிர்ப்பதற்காக அல்ல, உயிர்களை காப்பாற்றுவதற்காக தலைக்கவசம் அணியுங்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர் நீங்கள் பாதுகாப்பாக வீடு சேர வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே ஒவ்வொரு பயணத்திலும் தலைக்கவசம் அணிவதை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: