திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளின் புகைப்படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு ஆபாச இணையதளத்தில் வெளியாகின. இதுகுறித்து அறிந்த மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 20க்கும் மேற்பட்ட மாணவிகளின் போட்டோக்கள் ஆபாச இணையதளத்தில் வெளியானது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மாணவிகள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் மாணவிகளின் போட்டோக்களை ஆபாச இணையதளத்தில் பகிர்ந்தது அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் வயநாட்டைச் சேர்ந்த ஏபல் அகஸ்டின் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவரை கைது செய்து விசாரித்தனர்.
இதில் அவர் மாணவிகளின் இன்ஸ்டாகிராமில் இருந்து போட்டோக்களை எடுத்து அதை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி இணையதளத்தில் பகிர்ந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பின் போலீசார் ஏபல் அகஸ்டினை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து நேற்று முன்தினம் இரவு 100க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
