குருகிராமில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக்கை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 55 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை அவரது மனைவி கீதா அஞ்சலியிடம் வழங்கினர்.
ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி, சிபிஎம், ஜேஎம்எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள் அடங்கிய குழு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனம் வாங்க்சுக்கை நேரில் சந்திக்கச் சென்றது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு சந்திக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது சர்வாதிகாரப் போக்கு என ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் குற்றம்சாட்டினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு 55 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வாங்க்சுக்கிடம் நேரடியாக வழங்க முடியாததால், அவரது மனைவி கீதா அஞ்சலியிடம் எம்.பி.க்கள் ஒப்படைத்தனர்.
சோனம் வாங்க்சுக் தனது போராட்டத்தை கைவிடக் கூடாது என்று மத்திய அரசு விரும்புகிறதா? எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது என அவரது மனைவி கீதா அஞ்சலி கேள்வி எழுப்பினார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக 25 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்க்சுக், போராட்டக் கோரிக்கைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்தால் மட்டுமே தனது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
