திருச்சி: நடிகர் விஜய் தவெகவை ஆரம்பித்த பிறகு நடித்த கடைசி திரைப்படம் ஜனநாயகன். இது கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காததால், குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனிடையே சட்டமன்ற தேர்தல் முடிந்து விஜய் முதல்வராக பொறுப்பேற்று விட்டார். இந்நிலையில் தணிக்கை வாரிய சான்று கிடைத்த நிலையில் ஜூலை 23ம் தேதி (இன்று) ஜனநாயகன் ரிலீசாகும் என்று பட நிறுவனம் அறிவித்தது. அதன்படி உலகம் முழுவதும் ஜனநாயகன் இன்று ரிலீசானது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000 தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளது. சில தியேட்டர்களில் நேற்றிரவே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.
2 தினங்களுக்கு முன்பே இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியது. திருச்சியில் ரூ.190க்கு டிக்கெட் வழங்கப்பட்டது. ஆன்லைனில் முன் பதிவு துவங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. இந்நிலையில் இன்று தியேட்டர் வாசல்களில் முன்பதிவு டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்பட்டது. குறிப்பாக திருச்சி மாநகரில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் ரூ.2,000க்கு விற்கப்பட்டது. தஞ்சை, கரூரில் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை என அனைத்து முக்கிய ஊர்களிலும் ஜனநாயகன் டிக்கெட்டுகள் பிளாக்கில் அதிக விலைக்கு விற்கப்பட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், விஜய் படம் எப்போது ரிலீசானாலும் பிளாக்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பது வழக்கமாக உள்ளது. விஜய் நடித்த கடைசி படம் என்பதால், ரசிகர்கள் ஆவலில் அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்க செல்கின்றனர். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்துடன் படம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிந்தது. ஊழலை முற்றிலும் ஒழிப்பேன் என்று விஜய் கூறுகிறார். அதிக விலைக்கு டிக்கெட் விற்பதும் ஊழல் தான். முதலில் அதை தடுக்க விஜய் முன் வர வேண்டும். திரையரங்குகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இதுவே ரசிகர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றனர்.
ஊழலை முற்றிலும் ஒழிப்பேன் என்று விஜய் கூறுகிறார். அதிக விலைக்கு டிக்கெட் விற்பதும் ஊழல் தான். முதலில் அதை தடுக்க விஜய் முன் வர வேண்டும்.
தஞ்சையில் தியேட்டரிலேயே கூடுதல் கட்டணம் வசூல்
தஞ்சை மாநகரில் மட்டும் 4 திரையரங்குகளில் ஜனநாயகன் ரிலீசானது. இதில் ஒரு தியேட்டரில் ரூ.200 கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு நடந்தது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு நேற்று தியேட்டரில் இருந்து ஒரு வாட்ஸ்அப் தகவல் வந்தது. அதில் டிக்கெட் கட்டணம் ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மீதி தொகையை கியூ ஆர் கோடு மூலம் செலுத்துமாறு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சிலர், தியேட்டருக்கு சென்று முறையிட்டனர். ஆனால் தியேட்டர் நிர்வாகத்திடமிருந்து முறையான தகவல் வரவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
