போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சுக்கு நிலைகுலையாமல் டெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரம்; 3வது நாளாக படைபடையாக திரண்டு வந்த இளைஞர்கள்: கூடுதலாக போலீஸ், துணை ராணுவப்படை குவிப்பு

* 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்; ஜந்தர் மந்தரில் பதற்றம் அதிகரிப்பு

புதுடெல்லி: போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சுக்கு பிறகும் டெல்லி மாணவர்கள் போராட்டம் நிலைகுலையாமல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 3வது நாளாக நேற்று இளைஞர்கள், மாணவர்கள் படைபடையாக போராட்ட களத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் சிஆர்பிஎப் படையினர், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பகல் நேரத்தில் 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

மேலும், போராட்ட களத்தில் நேற்று திடீரென நடந்த சிறிய கல்வீச்சு சம்பவம் ஜந்தர் மந்தரில் பதற்றத்தை ஏற்படுத்தியது.  நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித் துறையில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஊடகம் மூலம் இளைஞர்கள் உருவாக்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 28ம் தேதியிலிருந்து தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி கட்சி இளைஞர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசி கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, மாணவர்கள் போராட்டத்திற்கு பெருமளவில் ஆதரவை திரட்டி உள்ளது. என்ன நடந்தாலும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படும் வரை ஓயமாட்டோம் என கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு தேசிய அளவில் ஆதரவுகள் பெருகி வருகின்றன. தடியடி சம்பவத்திற்குப் பிறகு 3வது நாளாக நேற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் அலைஅலையாக போராட்ட களத்திற்கு திரண்டு வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலிலும் இரவு பகலாக இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிஜேபியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். ஜூலை 20 என்பது இந்தியாவின் அரசியல் வரலாற்றில் குறிப்பாக சுதந்திர இந்தியாவில் ஒரு முக்கிய மைல்கல் தருணமாகும். இளைஞர்கள் இனி அமைதியாக இருக்க மாட்டார்கள்’’ என்றார்.

போராட்டம் நடக்கும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்கள் ஒருபுறம் என்றால், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தன்னார்வலர்களாக பலரும் குவிந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு உணவு, தண்ணீர், விசிறி என தங்களால் முயன்ற உதவிகளை கொடுத்து வருகின்றனர். போராட்டத்தில் இணைந்த நிஹாங் சீக்கியர்கள் உள்ளிட்ட சீக்கிய சமூகத்தினர் லங்கர் (கூட்டு சமையல்) சேவையை தொடங்கி உள்ளனர். நேற்று முழுவதும் சுடச்சுட சமையல் செய்யப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு தரப்பு தன்னார்வலர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அலுவலகம் செல்வோர், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் சமூகக் குழுக்கள் எனப் பலரும் தோளோடு தோள் நின்று போராட்டக்காரர்களுக்கு உணவு, சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களை வழங்கி வருகின்றனர். போராட்ட களத்திற்கு வர முடியாத பலரும் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து ஜந்தர் மந்தருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதனால், ஆன்லைன் உணவு டெலிவரி செய்பவர்கள் தொடர்ச்சியாக ஜந்தர்மந்தருக்கு வந்து உணவுகளை சப்ளை செய்து செல்கின்றனர். பீட்சா, பிரியாணி, பர்கர் என இளைஞர்களுக்கு பிடித்தமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முகம் தெரியாத நபர்களும் களத்திற்கு வர முடியாதவர்களும் வெகு தூரத்தில் இருந்தபடி மாணவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். வெப்பமான வானிலையில் போராட்டக்காரர்களுக்குச் சற்று இதமளிக்கும் வகையில், பல உணவுப் பொட்டலங்களுடன் சிறிய கையடக்க விசிறிகளும் வழங்கப்பட்டன.

இளைஞர்கள் சத்தான உணவை உட்கொள்ள வேண்டுமென்பதற்காக மூதாட்டி ஒருவர் நேற்று பழங்களை வழங்கினார். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள், விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். பானி பூரி வியாபாரிகள் கூட மாலை சமயங்களில் பானி பூரியை இலவசமாக வழங்கி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். போலீஸ் தடியடியால் பல மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னார்வ மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் போராட்ட களத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், ஜந்தர்மந்தர் போராட்ட களம் ஒன்றிய அரசால் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக மாறி வருகிறது. இதற்கிடையே, மாணவர்கள் போராட்டம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆர்பாட்டங்களை கருத்தில் கொண்டு டெல்லியில் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎப்) 20 கூடுதல் கம்பெனிகளை பணியமர்த்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை மேற்கு வங்கத்தில் இருந்த இந்த கூடுதல்ப் படைப்பிரிவுகள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். ஒரு சிஆர்பிஎப் கம்பெனி என்பது 100 வீரர்களை கொண்டதாகும். மேலும் ஜந்தர்மந்தரை சுற்றி போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்ட களத்திற்கு மேலும் மாணவர்கள் வருவதை தடுப்பதற்காக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று பகல் நேரத்தில் மூடப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பாரகம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், ஐடிஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக டெல்லி மெட்ரோ ரயில் கழகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஜண்டேவாலன் நிலையமும் மூடப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

இது சர்ச்சையானதைத் தொடர்ந்து மாலையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறக்கப்பட்டு வழக்கமாக செயல்பட்டன. இதற்கிடையே, நேற்று மாலை ஜந்தர்மந்தர் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் திடீரென கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதில், காவல் உதவி ஆணையர் ஒருவர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. போராட்டக்காரர்கள் அமைதி காக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளது. அதே சமயம், ஜந்தர்மந்தர் தவிர வேறு எந்த இடத்திலும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் நடத்தவில்லை என்றும், சில குண்டர்கள் மூலம் அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாகவும் சிஜேபி கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே கூறி உள்ளார்.

* திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆதரவு
ஜந்தர்மந்தரில் மாணவர்கள் நடத்தும் போராடத்திற்கு திமுக எம்பி நேரில் சென்று நேற்று ஆதரவளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் இந்த போராட்டத்திலே துணை நிற்கிறோம் என்பதை தெரியப்படுத்தும் விதமாக நாங்கள் கலந்து கொண்டோம். நீட் மாணவர்கள் மற்றும் அவர்களின் கனவுகளுக்கு எதிரானது, ஏழை மாணவர்களுக்கும் எதிரானது என்பதால் நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து அதனை எதிர்த்து இருக்கிறோம்.

இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடர்ந்தோம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நீட்டுக்கு எதிரான மசோதா நிறைவேற்றம் செய்து அனுப்பினோம். அது தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்துக் கிடக்கிறது. தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தி வருகிறது. இன்று நாடு முழுவதும் இருக்கும் இளைஞர்கள், நீட் தேர்வு மாணவர்களுக்கு எவ்வளவு எதிரானது என்பதை உணர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அவ்வாறு போராடும் அவர்களுக்கு உறுதுணையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் அந்த மாணவர்களின் போராட்டத்தில் துணை நிற்கின்றோம் என்பதை நாங்கள் தெரிவித்துள்ளோம். குறிப்பாக இந்த விவகாரத்தில் மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பது கண்டிக்கத்தக்கதாகும். அதாவது மாணவர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் யாரும் வன்முறையை கட்டவிழ்த்து விட மாட்டார்கள்’’ என்றார்.

* பேச்சுவார்த்தைக்குத் தயார்
போராட்ட களத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், ‘‘ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டா பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதற்காக சந்திக்குமாறு அழைப்பு விடுத்ததாகவும் காவல்துறை எங்களிடம் தகவல் தெரிவித்தனர். நாங்கள் யாருடைய வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்ல மறுத்துவிட்டோம். மக்களின் மன்றம் இங்கே உள்ளது. அமைச்சர்கள் மக்கள் மத்தியில் வர வேண்டும். அவர்கள் பேச விரும்பினால், ஜந்தர் மந்தரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பாதுகாப்பு தொடர்பான கவலைகள் இருந்தால் போராட்டக் களத்திற்கு அருகிலுள்ள நடுநிலையான இடத்தை பரிசீலிக்கவும் நாங்கள் தயார். பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்னை தீர்க்கப்பட்டால் நல்லது. அதே சமயம் அர்த்தமற்ற விவாதங்களுக்கு எங்களுக்கு நேரமில்லை. எங்களின் கோரிக்கைகளை உண்மையாகவே நிறைவேற்றுவதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்’’ என்றார்.

* வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வலியுறுத்தல்
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த மாதம் 28ம் தேதி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சி சார்பாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்பாக கடந்த 18ம் தேதி வாங்சுக்கை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பிறகு மீண்டும் தனது உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.

25 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் அவரது உடல்நிலையை கருதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே திறந்த மடல் எழுதியுள்ளார். இதே போல பல்வேறு கட்சி எம்பிக்கள் சோனம் வாங்சுக்கை நேற்று நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என ஒன்றிய அரசு உத்தரவாதம் அளித்தால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள தயார் என வாங்சுக் அறிவித்துள்ளார்.

Related Stories: