ஈரோடு ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் குவிந்ததால் விற்பனை களைகட்டியது

ஈரோடு : ஈரோடு ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் குவிந்ததால் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் மறுநாள் முழுவதும் ஜவுளிச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் நேரடியாக வந்து கடைகள் அமைப்பதாலும், மொத்தமாக கொள்முதல் செய்யும் ஜவுளிகள் குறைந்த விலையில் கிடைப்பதாலும் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா,கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஜவுளியை கொள்முதல் செய்கின்றனர்.

இந்நிலையில், ஈரோடு சென்டிரல் தியேட்டர் பகுதி, ஸ்டேட் வங்கி ரோடு, காந்திஜிரோடு உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவில் ஜவுளிச்சந்தை நடந்தது. விடிய, விடிய நடந்த சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஜவுளியை ஆர்வமாக வாங்கி சென்றனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்ததால் சில்லறை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோன்று, வெளிமாநில வியாபாரிகளான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குவிந்ததால் மொத்த வியாபாரமும் நேற்று வழக்கத்தை விட விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆடி மாதம் தொடங்கியதை ஒட்டியும், ஆடி 18 பண்டிகை வருவதையொட்டியும், நேற்று ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக குழந்தைகளுக்கான பனியன், ஜட்டி, சட்டைகள் அதிக அளவில் விற்பனையானது.

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறுகையில்: கடந்த ஒரு மாதமாக ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம் சில்லறை வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.ஆனால், தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ளதால், வியாபாரம் ஓரளவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநில வியாபாரிகளும் வழக்கத்தை விட அதிகமாக வந்ததால் மொத்தம் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. நேற்று ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் 40 சதவீதமும், சில்லரை வியாபாரம் 45 சதவீதமும் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: