பாலைவனமாக மாறிய காவிரி கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

*விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர் : டெல்டா மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் காவிரி ஆறு முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு பாலைவனம் போல் காட்சி அளி ப்பது விவசாயிகள், பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறந்து விட்டாலே டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளும் ஆன்மீக கொண்டாட்டங்களும் களைகட்ட தொடங்கி விடும்.

குறிப்பாக ஆடிப்பெருக்கு விழாவின் போது காவிரி ஆற்றில் பொங்கி வரும் தண்ணீரை கண்டு மக்கள் மகிழ்வது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் ஆடி மாதம் நெருங்கி வரும் வேளையிலும் காவிரி ஆற்றில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வெறும் மணல் பரப்பாக காட்சியை அழிப்பது ஒட்டு மொத்த டெல்டா மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததாலும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய தண்ணீர் வராததாலும் காவிரி ஆற்று படுகைகள் அனைத்தும் வறண்டு போய் உள்ளன. ஆங்காங்கே சிறு குட்டைகளில் தேங்கி உள்ள சொற்ப தண்ணீரை தவிர ஆறு முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.

காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் டெல்டா பகுதி விவசாயிகள் தற்போது ஆற்றின் நிலையை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கின்றனர்.

ஆடி பட்டத்தை தேடி விதைக்க வேண்டிய இந்த முக்கிய காலகட்டத்தில், ஆறு இப்படி வறண்டு கிடப்பது எங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருவதால் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயம் மட்டும் இன்றி காவிரி ஆற்றை ஒட்டியுள்ள கூட்டு குடிநீர் திட்டங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

உயிர் துடிப்பான காவிரி ஆறு மீண்டும் எப்போது புது வெள்ளத்துடன் பாய்ந்து ஓடும், தங்களின் வாழ்வாதாரம் எப்போது செழிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த டெல்டாவும் காத்து கிடக்கிறது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் நான்கு ஆண்டுகள் சரியான காலகட்டத்தில் அதாவது ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஒரு ஆண்டு மட்டும் சற்று காலதாமதமாக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை

ஆறு வறண்டு போனதால் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. வறண்டு கிடக்கும் காவிரி நிலையை பார்த்து தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை பெற்று தர சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் டெல்டா பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: