- உடுமலை
- அவிநாசி
- காமநாயக்கன்பாளையம்
- பொங்கலூர்
- பொங்கலூர் காலனி
- பாப்பநாயக்கன்பாளையம்
- பெத்தநாயக்கன்பாளையம் காலனி
- பிசி நலவாழ்வு காலனி
- அவிநாசி ஒன்றியம் பொங்கலூர் ஊராட்சி
அவிநாசி : அவிநாசி ஒன்றியம் பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொங்கலூர், பொங்கலூர் காலனி, பாப்பநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் காலனி, பி.சி வெல்ஃபேர் காலனி ஆகிய பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு சுமார் 10 பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
கடந்த 4 மாதங்களாக இங்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் அவிநாசி எம்எல்ஏவும், தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சருமான கமலியை நேரில் சந்தித்து இப்பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்னை குறித்து நேரடியாக மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை குடிநீர் வழங்கல் சீராக்குவது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வரும் வரை நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 10 கிலோ மீட்டர் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பொதுக்குழாயில் வரும் குடிநீரையே பயன்படுத்தி வந்தனர். கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டதால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து கோவை – சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேவூர் போலீசார் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மற்றும் குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசி குடிநீர் விநியோகத்தை உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.பல்லடம்: பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் குடிநீர் கேட்டு கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
பல்லடம் ஒன்றியம் கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியை சேர்ந்த காமநாயக்கன்பாளையத்தில் கடந்த 40 நாட்களாகவும், மூகாம்பிகை நகரில் 4 மாதங்களாகவும் அத்திகடவு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும், மூகாம்பிகை நகரில் கடந்த 15 ஆண்டுகளாக தார் சாலை வசதி இல்லை மற்றும் தெருவிளக்கு வசதியும் இல்லை.
இது குறித்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.ராம்குமார் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆவேசம் அடைந்த காமநாயக்கன்பாளையம், மூகாம்பிகை நகர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கோவை – திருப்பூர் மாவட்ட சந்திப்பு எல்லையான காமநாயக்கன்பாளையம் நான்கு சாலை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தர்மர், ஊராட்சி செயலாளர் ரங்கநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, 10 நாட்களுக்குள் மீட்டர் பொருத்தி குடிநீர் வினியோகத்தை சீரமைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் 2 மணி நேரம் பல்லடம் – பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இது குறித்து மூகாம்பிகை நகர் பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்களது நகரில் தார் சாலை அமைத்து தர வேண்டி கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்து வருகிறோம். யாரும் செய்து தரவில்லை. மாற்றம் வேண்டி நாங்கள் அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெறச்செய்த ராம்குமார் எம்எல்ஏவிடம் மனு அளித்தோம்.
அவரும் எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண இது வரை எங்கள் பகுதிக்கு நேரில் வரவில்லை. எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டி சாலை மறியல் போராட்டம் நடத்தி உள்ளோம். இனியாவது எங்களது கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறோம்’’ என்றனர்.
குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
உடுமலை : மடத்துக்குளம் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மடத்துக்குளம் ஜே.ஜே நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகக் குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனைக் கண்டித்து குமரலிங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்களது பகுதியில் குடிநீர் தொட்டி மற்றும் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதால் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தற்போதைய குடிநீர் தேவைக்காக இரண்டு புதிய குழாய்கள் அமைத்து தரப்படும் என்றும், மற்ற கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் முனிசாமி தலைமையிலான காவல்துறையினரும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
