உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பு நேரத்தில் வால்பாறையில் ஒரே இரவில் 6 வீடுகளில் கொள்ளை முயற்சி

*மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வால்பாறை : உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பு நேரத்தில் வால்பாறையில் ஒரே இரவில் 6 வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வால்பாறை போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் மணி, உண்ணி, தேவி, மல்லிகா, தங்கவேல், பொன்னுத்தாய் ஆகிய 6 பேரின் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதில் சிலர் வெளியூருக்கு சென்றிருந்ததால், அவர்களது வீடுகளில் இருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளனவா என்பது அவர்கள் திரும்பி வந்த பிறகே உறுதியாக தெரியவரும்.

இந்நிலையில் தங்கவேல் என்பவரின் வீட்டின் மரக்கதவும் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இருப்பினும், அங்கு இருந்த பொருட்கள் எதுவும் எடுத்துச்செல்லப்படாமல் மர்ம நபர்கள் தப்பிச்சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அதே பகுதியில் வளர்க்கப்பட்டிருந்த வாத்துகளை சிறுத்தை வேட்டையாடிய சம்பவமும் நடைபெற்றுள்ளது. இதனால், அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் கேட்ட சத்தம் கொள்ளை முயற்சியால் ஏற்பட்டதா அல்லது வன விலங்கு நடமாட்டத்தால் ஏற்பட்டதா என்ற குழப்பம் ஆரம்பத்தில் நிலவியது. ஆனால், வீடுகளின் பூட்டுகள் திட்டமிட்டு உடைக்கப்பட்டிருந்ததால் இது கொள்ளை முயற்சி என்பது உறுதியானது.

சில தினங்களுக்கு முன்பு வால்பாறையில் நடைபெற்ற திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், மீண்டும் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருப்பது பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

மேலும், அதிகாலை நடைபெற்ற உலகக் கால்பந்து போட்டியை பலர் பார்த்து கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்தி இந்த கொள்ளை முயற்சி நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் இதற்கு முந்தைய திருட்டு வழக்குக்கும், தற்போதைய கொள்ளை முயற்சிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் வால்பாறை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அருகிலுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றி, சந்தேக நபர்கள் அந்த வழியாக நடமாடியுள்ளனரா என்பதை கண்டறிய போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக நடைபெறும் கொள்ளை முயற்சிகளைத் தடுக்க இரவு நேர ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அருகிலுள்ள உறவினர்கள் அல்லது அயலவர்களுக்கு தகவல் தெரிவித்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: