×

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது; முதல் நாளில் முடங்கியது நாடாளுமன்றம்: வினாத்தாள் கசிவு, ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பி கடும் அமளி

 

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென ஏற்கனவே எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இந்நிலையில், காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்பி முழக்கமிடத் தொடங்கினர். இதனால் கேள்வி நேரம் நடக்காமலேயே, அவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். நண்பகல் 12 மணிக்கு அவை கூடிய பிறகும் கூச்சல் குழப்பம் நீடித்ததால் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அமளிக்கு இடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் தாக்கல் செய்தார்.

பிற்பகல் 12.30 மணிக்கு பிறகு பகல் 1 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும், 2.30 மணி வரையிலும், 3 மணி வரையிலும் என 6 முறை அவை ஒத்தி வைத்த பிறகும் அமளி அடங்கவில்லை. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் அவை 6 முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. காலையில் அவை கூடியதும் புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து, ‘‘நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வேண்டும். ஜந்தர் மந்தரில் கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இந்த அரசு அவர்களை ஒடுக்கவும், இப்பிரச்சினையை நசுக்கவும் முயற்சிக்கிறது’’ என்றார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ‘அவமானம், அவமானம்’ என்று முழக்கமிட்டனர். இந்த அமளியால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து 5 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக அவை நாள் முழுவதும் முடங்கியது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்.பிக்கள் போராட்டம்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தைக் கண்டித்தும், காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தியும், திமுக எம்.பி.க்கள் பச்சை துண்டு அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* ஒவ்வொரு குரலும் கேட்கப்பட வேண்டும்

மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பருவமழை சிறப்பாக அமையவும், அதேபோல நாடாளுமன்றக் கூட்டத்தொடரும் ஆக்கப்பூர்வமாக அமையவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவையில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டும். நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல கூட்டுத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மை இருக்கும் இடத்தில் கூச்சல் தேவையில்லை என்று நான் நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு குரலும் கேட்கப்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழு மனதுடன் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

 

Tags : Monsoon ,Parliament ,Ram ,New Delhi ,monsoon session ,Ayodhya Ram temple ,Lok Sabha ,
× RELATED பரந்தூர் விமானநிலைய திட்டத்தை...