80 குடும்பத்தினருக்கு மனைபட்டா வழங்க கோரிக்கை

 

கொள்ளிடம், ஜூலை 20: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 80 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு சொந்த மனைப்பட்டா இல்லாமல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகாலமாக வசித்து வருகின்றனர். ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு இதுவரை சொந்த குடியிருப்பு மனைப்பட்டா இல்லாமல் இருந்து வருவதால் அரசின் அனைத்து சலுகைகளையும் பெற முடியாமல் இருந்து வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா வழங்க பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது ஒரு வார காலத்திற்குள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதி அளித்தனர். ஆனால் தேர்தல் வந்ததால் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற மூன்று மாதங்களைக் கடந்தும் புத்தூரில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று புத்தூர் பகுதியைச் சேர்ந்த பாபு கூறினார்.

 

Related Stories: