திருவாரூரில் 2 வாரத்தில் கஞ்சாவிற்பனையில் ஈடுபட்ட 41 பேர் கைது

 

திருவாரூர், ஜுலை 30: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 வார காலத்தில் 31 கஞ்சா வழக்குகளில் 41 பேர் கைது செய்யப்பட்டு 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக கடந்த 8ந் தேதி முதல் ஒரு மாதத்திற்கு தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுவருகிறது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலையங்களிலும் கடந்த 2 வாரங்களில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தொடர்பாக wமேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 31 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 41 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 45 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 இருசக்கரவாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் குட்கா விற்பனை தொடர்பாக 11 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 300 கிலோ குட்கா மற்றும் ஒரு நான்கு சக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 84 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதேபோன்று மாவட்டத்தில் போதைபொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு எஸ்.பி சதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: