இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான 1 ஏக்கர் கோயில் நிலத்தை தனிநபர் விற்க முயற்சிப்பதாக மக்கள் புகார்: தண்டராம்பட்டு அருகே அதிகாரிகள் அளவீடு

 

தண்டராம்பட்டு, ஜூலை 30: தண்டராம்பட்டு அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலத்தை தனிநபர் விற்க முயற்சி செய்வதாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், அதிகாரிகள் நேரில் அளவீடு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மேல் சிறுபாக்கம் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மற்றும் கிணறு உள்ளது. இந்நிலையில் தனிநபர் ஒருவர் மண் கொட்டி கிணற்றை மூடியதோடு, அந்த இடத்தில் மண் கொட்டி சமன் செய்து, வீட்டுமனை பட்டா போட்டு விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் பிரகாசம், உதவி ஆணையர் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர். அதன்பேரில் நேற்று ஓய்வுபெற்ற தனி வட்டாட்சியர்(ஆலய நிர்வாகம்) சுப்பிரமணியன், சர்வேயர் சின்னராசு, கிராம நிர்வாக அலுவலர் ராமன், இந்து சமயஅறநிலைதுறை பணியாளர் ரமேஷ் தலைமையில் நேற்று கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தை அளவிடும் பணி நடைபெற்றது. இதுதொடர்பாக அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: