நாகப்பட்டினம் நகரில் மையப்பகுதி வழியாக செல்லும்; சாக்கடையில் குப்பை, கழிவுகள் தேங்கி அடைப்பு: தூர்வாரி சுத்தப்படுத்தினால் தடையின்றி கடலில் சேரும்

 

நாகப்பட்டினம், ஜூலை 20: நாகப்பட்டினம் நகரின் மத்திய பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீரில் கழிவுநீர் புகுவதை தடுக்க சாக்கடையை தூர்வார் சுத்தம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகப்பட்டினம் நகராட்சியின் மையப்பகுதியாக வெளிப்பாளையம் பப்ளிக் ஆபிஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் தேவி தியேட்டர் அமைந்துள்ளது. இதன் அருகில் பெரிய அளவில் சாக்கடை செல்லும் பாதை உள்ளது. நகர பகுதி மட்டும் இன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்யும் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் வடியும் வடிகால் பகுதியாகவும் அமைந்துள்ளது. இந்த வடிகால் இறுதியாக கடல் முகத்துவார பகுதியில் சென்றடையும் வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளியில் ஆரம்பித்து வ.உ.சி தெரு, பப்ளிக் ஆபீஸ் ரோடு, பாரதி மார்க்கெட், தர்மகோவில் தெரு, மீன்மார்க்கெட், நல்லியான்தோட்டம், வேதநாயகம்செட்டித்தெரு வழியாக கடலுக்குள் செல்லும் மிகப்பெரிய வடிகால் ஆகும். இந்த வடிகால் அடைப்பு ஏற்பட்டால் நகர பகுதி முழுவதும் சாக்கடை நீர் புகுந்து விடும். மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறாமல் நகர பகுதியில் புகும் அபாயம் உள்ளது. இந்நிலையில் இந்த சாக்கடை செல்லும் ஆரம்ப இடமான அந்தோணியார் மேல்நிலை பள்ளியிலிருந்து கடற்கரை வரை இடைபட்ட அனைத்து இடங்களிலும் சாக்கடையை சுத்தம் செய்து தூர்வாராமல் உள்ளதால் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. பல இடங்களில் வீடுகளின் கற்கள் மற்றும் மண் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே சிறுசிறு சுவர்கள்போல அடைத்துள்ளது. இதனால் நகர பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் கொசுத்தொல்லையும் அதிகமாகி பொதுமக்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்பட்டு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வரும் காலம் மழைக்காலம் என்பதால் நாகப்பட்டினம் நகரம் மழையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது அனைவரும் அறிந்ததே ஆகும். இந்நிலையில் மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். எனவே,பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு போர்க்கால அடிப்படையில் சாக்கடையை ஆரம்ப இடமான அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முதல் கடற்கரை வரை அனைத்து பகுதிகளிலும், சாக்கடையில் உள்ள குப்பைகளையும், கற்களையும் மணல்திட்டுகளையும் தூர்வாரி சுத்தம் செய்யவேண்டும். அப்படி செய்தால் நகர பகுதி முழுவதும் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி நிற்காமல் கடலில் உடனே வழிந்து விடும்.

வீடுகளின் கற்கள் மற்றும் மண் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே சிறுசிறு சுவர்கள்போல அடைத்துள்ளது.

Related Stories: