பாட்னா: பீகாரில் பாஜவின் கோட்டையாக கருதப்படும் பங்கிப்பூர் தொகுதியில் கடந்த 2025ம் ஆண்டு தேர்தலில் வென்ற பாஜ பேரவை உறுப்பினர் நிதின் நபின், அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் நிதின் நபின் தனது பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், பங்கிப்பூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இங்கு பாஜ வேட்பாளராக இளைஞரணி தலைவர் அபிஷேக் குமார் சின்ஹா முதலில் அறிவிக்கப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் களமிறங்கி யதும், தனது வேட்பாளரை பாஜ மாற்றியது. இந்த சூழலில் நேற்று பங்கிபூர் தொகுதியில் பாதயாத்திரை சென்ற பிரசாந்த் கிஷோர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “ஒரேயொரு நபர் களமிறங்கியதற்கே மேலிருந்து கீழ் வரை ஒட்டுமொத்த பாஜவும் பயத்தில் நடுங்குகிறது. முன்பு இந்த தொகுதியை பெரிதாக கண்டு கொள்ளாத பாஜ தலைவர்கள் தற்போது இங்கு வாக்கு சேகரிக்க வருகின்றனர். யாரை நிறுத்தினாலும் வெற்றி பெற்று விடுவோம் என்று சொன்ன பாஜ தலைவர்கள் இப்போது ஒவ்வொரு வார்டுக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்கு கேட்கிறார்கள்.
இதுதான் ஜனநாயகத்தின் வலிமை. வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜ பணம், உணவு தருகின்றனர். மக்கள் அதை வாங்கி கொள்ளுங்கள். ஆனால் அத்தகைய சலுகைகளுக்கு மயங்கி விடாமல், வாக்குப்பதிவு நாளில் அத்தகைய அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்” என்று கூறினார்.
