கண்ணமங்கலம், ஜூலை 18: கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு தடுப்பு மாதத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜூலியன் விவேக் லியாண்டர் தலைமை தாங்கினார். அப்போது டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை ஒழித்தல், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருத்தல், தண்ணீர் தேங்காமல் பாதுகாத்தல், வாரந்தோறும் குடிநீர் சேமிப்பு பாத்திரங்களை சுத்தம் செய்தல், முழுக்கை ஆடைகளை அணிதல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டெங்கு தடுப்பு உறுதிமொழியை மருத்துவ அலுவலர் முன்னிலையில் சுகாதாரத் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர், ‘‘வீட்டைச் சுற்றித் தூய்மை, டெங்குவை வெல்லும் வலிமை’’, ‘‘கொசுவை ஒழிப்போம், டெங்குவை வெல்வோம்’’, ‘‘சுத்தம் காப்போம், டெங்கு விரட்டுவோம்’’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தேவி, சுகாதார ஆய்வாளர்கள் முரளி, ராஜேஷ்குமார், நவீன்குமார், வினோத்குமார், ராஜேஷ், ஜெய்கணேஷ் மற்றும் சுகாதாரத் துறையினர், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
