பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக விற்பனை; விஐபிக்களின் தொடர்பு அம்பலம்? பதிவுத்துறை அதிகாரி பற்றி திடுக்கிடும் தகவல்கள்: 5 அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்பி விசாரணை

பழநி: பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கோயில் மற்றும் அரசு அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் 4 மணி நேரத்திற்கு மேல் தீவிர விசாரணை நடத்தினர். இந்த முறைகேட்டில் விஐபிக்களுக்கு தொடர்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பத்திரப்பதிவு மாவட்டப் பதிவாளர் குறித்தும் அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம், ஆண்டவன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.35 ஏக்கர் நிலத்தை, திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் கடந்த ஜூலை 7ம் தேதி ரூ.2 கோடிக்கு தனியார் இருவருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் தவெக அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கண்காணிப்பாளர் (நிலங்கள் பிரிவு) முருகானந்தம் (55) சம்பவம் தொடர்பாக பழநி அடிவாரம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், இடத்தை விற்பனை செய்த முருகதாஸ், கிரையம் வாங்கிய திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழநி அருகே டி.கே.என் புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீது அடிவாரம் போலீசார் கூட்டுச்சதிவு, மோசடி உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து துறைரீதியான நடவடிக்கையாக ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கை, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இந்த வழக்கின் ஆவணங்களை அடிவாரம் போலீசார், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்குள்ள நிலங்கள் பிரிவிற்கு சென்று சம்பந்தப்பட்ட இடத்திற்கான ஆவணங்கள், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட ஆட்சேபனை கடிதங்களை பெற்று கொண்டனர். பின்னர் பிரச்னைக்குரிய இடத்திற்கு நேரில் சென்றனர். அங்கு நிலத்தின் அமைவிடம், எல்லைகள், இடத்தின் சந்தை மதிப்பீடு குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகத்திலும் முதல்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையின் 2வது நாளான நேற்று திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி ஷாஜிதா தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். நிலத்தினை முறைகேடாக பதிவு செய்ததாக போலீசில் புகார் அளித்த பழநி கோயில் நிலங்கள் பிரிவின் கண்காணிப்பாளர் முருகானந்தம், அறநிலையத்துறை ஆய்வாளர் சிவநேசன், பழநி கோயில் வழக்குகள் பிரிவு கண்காணிப்பாளர் கணபதி, பழநி கோயிலின் சார்பில் ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிவது மற்றும் வருவாய் துறை செயல்பாடுகளை கவனித்து வந்த ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், விஏஓ சின்னச்சாமி ஆகிய 5 பேரிடம் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

பத்திரப்பதிவு குறித்து பூர்வாங்கமாக நடந்த விசாரணையில், ‘பத்திரப்பதிவுக்காக ஆவணங்கள் கொடுத்தபோது, பழனி சார்பதிவாளர் அதை வாங்கியுள்ளார். ஆனால் தள்ளுபடி செய்யாமல், நிலுவையில் உள்ளதாக வைத்துவிட்டு விடுமுறையில் சென்று விட்டார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா, கொடைக்கானலில் உதவியாளராக உள்ள ஜஸ்டின் மணிகண்டனை ஒரு நாள் விடுமுறைக்காக வரவழைத்து ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2 கோடிக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார்.

பதிவு முடிந்ததும் அவர் கொடைக்கானலுக்கு மீண்டும் பணிக்குச் சென்று விட்டார். இதனால் கண்டிப்பாக பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. விஐபிக்களுக்கு கண்டிப்பாக தொடர்பு இருப்பது நிரூபணமாகியுள்ளது. இதனால் மாவட்ட பதிவாளர் சசிகலாவிடம் விசாரணை நடத்தினால், கண்டிப்பாக இந்த பதிவுக்குப் பின்னால் இருக்கும் விஐபி யார் என்பத தெரிந்து விடும். இதனால் அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். சசிகலா, கடந்த 6 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் மாற்றப்படாமல் இருந்துள்ளார்.

எந்த அதிகாரிகள் வந்தாலும் அவர் மட்டும் மாற்றப்பட மாட்டார். இவருக்கு பல ஐஏஎஸ், அரசியல் பிரமுகர்கள் பின்புலமாக இருப்பதாக கூறப்படுகிறது. சர்வ செல்வாக்கு படைத்தவராக சசிகலா இருந்து வந்தார். இவர்தான் இந்த பதிவுக்கு பக்கபலமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்தினால் முழு விவரமும் தெரியவரும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

* சிசிடிவி பதிவுகள் ஆய்வு
பழநி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீஸ் குழுவினர், மாவட்ட பதிவாளர் (பொ) மகேஷிடம் பத்திரப்பதிவு செய்வதற்காக தண்டபாணி சுவாமிகள் மட அறக்கட்டளை உறுப்பினர் முருகதாஸ் சமர்ப்பித்த ஆவணங்கள், இந்நிலம் பதிவு செய்வது தொடர்பாக கோயில் நிர்வாகம் வழங்கிய ஆட்சேபனை கடிதங்கள், பத்திரப்பதிவு செய்வதற்கு முந்தைய 2 வேலை நாட்களின் சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் பத்திரப்பதிவு நடந்த தினத்தின் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் நிலத்தை அபகரிக்க நடந்த முறைகேடு பத்திரப்பதிவு விவகாரத்தில் உயரதிகாரிகள் மற்றும் அரசியல் பின்புலங்களின் நிர்பந்தங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள் என்றும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இன்றும் (சனி) விசாரணை நடைபெற உள்ளது.

* மாவட்ட பதிவாளர் சசிகலாவிடம்
விசாரணை நடத்தினால், கண்டிப்பாக இந்த பதிவுக்குப் பின்னால் இருக்கும் விஐபி யார் என்பத தெரிந்து விடும். இதனால் அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்

* 3 பேர் தலைமறைவு
ரூ.100 கோடி கோயில் நிலம் முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இடத்தை விற்பனை செய்த முருகதாஸ், கிரையம் வாங்கிய வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய 3 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களை கைது செய்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

* பத்திரப்பதிவு செய்து கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி விவரம்
பத்திரப்பதிவு செய்து கொடுத்த திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் அண்ட் தண்டபாணி சுவாமிகள் டிரஸ்டின் நிர்வாகிகள் விவரம்:
1). எம்.டி.முருகதாஸ் (56), விழுப்புரம்.
2). எம்.கணேசன் (63), தாழியூர், ஊழிப்பாளையம், கோவை.
3). குமரகுருபரன் (46), பாளையங்கோட்டை, திருநெல்வேலி,
4). சண்முகசுந்தரம் (43), திருநெல்வேலி.
5). எம்.சுவாமிநாதன் (68), அழகாபுரி, ராஜபாளையம், விருதுநகர்,
6). சிவக்குமார் (41), திருநெல்வேலி.
7). கணேசன் (39), அழகாபுரி, ராஜபாளையம், விருதுநகர்.

* அடுக்கடுக்கான கேள்விகள்
விசாரணையில் நிலத்தின் உரிமையாளர் அதனை தானமாக வழங்கியது துவங்கி, அந்நிலத்தை முந்தைய காலத்தில் அனுபவித்து வந்தவர்கள், நிலத்திற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தண்டபாணி சுவாமி அறக்கட்டளை உறுப்பினர்கள் விபரம், அந்த நிலத்தினை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தவர்களின் விபரங்கள்,

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் அளவுகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள், நிலத்தினை கையகப்படுத்திய பின்பு யாரேனும் இடத்தை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றார்களா? அவர்கள் மீது கோயில் நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது எப்படி கோயில் நிர்வாகத்திற்கு தெரிந்தது?

இதுதொடர்பாக அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என அடுக்கடுக்கான கேள்விகள் விசாரணையில் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கோயில் அலுவலர்கள் அனுப்பப்பட்டனர். இதன்பின்பு, உணவு இடைவேளைக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் மீண்டும் வந்து ஆலோசனை நடத்தினர்.

Related Stories: