10 பெட்டிகளை கொண்ட ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தி உலக அளவில் முத்திரை – பிரதமர் பெருமிதம்

சண்டிகர்: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை ஜிந்த் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அவர், இன்று இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் ரயில் மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயங்கியது என்பது நமக்கு தெரியும், இன்றும் அதைப் பற்றிப் படிக்கிறோம். அதேபோல, எதிர்காலத்தில் ஹைட்ரஜன் ரயில்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ஜிந்த், சோனிபட் மற்றும் ஹரியானா ஆகிய இடங்களின் பெயர்களை தவிர்க்க முடியாது, இவை வரலாற்றில் இடம்பெற்று விட்டன என்றார்.

உலக நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகமாகி வெறும் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் தான் இருக்கும். தற்போது, ​​மூன்று அல்லது நான்கு நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் திறனைக் கொண்டுள்ளன; அந்த நாடுகளிலும்கூட, இத்தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

ஆனால் இந்தியாவின் ஹைட்ரஜன் ரயில் குறித்த சிறப்பம்சங்களை அறியும்போது உங்களுக்குப் பெருமிதம் ஏற்படும். ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே இயக்கப்படும் இந்த ஹைட்ரஜன் ரயில், உலகின் மிக வலிமையான ஹைட்ரஜன் ரயிலாகும். இதுவே இந்தியாவின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலும் கூட. உலகின் பிற பகுதிகளில் ஹைட்ரஜன் ரயில்கள் பொதுவாக மூன்று அல்லது நான்கு பெட்டிகளைக் கொண்டவையாக இருக்கும் நிலையில், இந்தியா தனது தொடக்கத்திலேயே 10 பெட்டிகளைக் கொண்ட ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தி உலக அளவில் முத்திரை பதித்துள்ளது என பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் இந்த இந்திய ஹைட்ரஜன் ரயில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாததோடு Make in India திட்டத்தின் மிகச் சிறந்த வெற்றிக்கு ஒரு சான்றாகவும் திகழ்கிறது. எதிர்காலத்தில், ஹைட்ரஜன் ரயில்களுக்கான கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு உருவாக்கப்படும். ஹைட்ரஜன் ரயில் கட்டமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், இந்த ரயில் ஹரியானா மாநில இளைஞர்களுக்குப் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது என்றார்.

 

Related Stories: