இன்று முதல் 31ம் தேதி வரை மக்கள் தொகை ‘சுய கணக்கெடுப்பு’

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களின் விவரங்களை சுயமாக இணையவழியில் பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ இன்று முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டத்தில் வீடுகள் கணக்கெடுப்பும், 2வது கட்டத்தில் விவரங்கள் சேகரிப்பும் நடைபெறுகிறது. ஒவ்வொருவரும் இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் தங்களின் விவரங்களை தாங்களாகவே இணையவழியில் (https://se.census.gov.in/) எளிதாக பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ இன்று (17ம் தேதி) முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இணையதளத்திற்கு சென்று சுய கணக்கெடுப்பு பயிற்சி என்ற போர்ட்டலில் பதிவு செய்யலாம். ஒரே செல்போன் எண் தான் பதிவு செய்ய வேண்டும். குடும்ப தலைவி அல்லது குடும்ப தலைவர் பதிவு செய்யலாம். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் 33 வகையான கேள்விகள் இடம்பெறுகிறது.

இணையதளம் வழியாக சுய கணக்கெடுப்பு மூலம் பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த சுய கணக்கெடுப்பு பணியை இணையவழியில் நிறைவு செய்த ஒவ்வொருவருக்கும், அவரவர் கைப்பேசி எண்ணுக்கு சுயகணக்கெடுப்பு எண் வழங்கப்படும். பின்னர் வீட்டு பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடக்கூடிய அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்த பணி வருகிற ஆகஸ்டு 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும்.

இதில் அரசு நியமித்துள்ள கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கே வந்து விவரங்கைளை சேகரிக்க உள்ளனர். அவர்கள் வீடுகளுக்கு வரும்போது, ஏற்கனவே இணையவழியில் தங்களின் விவரங்களை பதிவு செய்தவர்கள், தங்கள் கைப்பேசி எண்ணுக்கு வந்துள்ள சுய கணக்கெடுப்பு எண்ணை தெரிவித்தால், அந்த விவரங்களை சரிபார்த்து கணக்கெடுப்பை நிறைவு செய்வார்கள்.

இணையவழியில் விவரங்களை பதிவு செய்தவர்கள் கணக்கெடுப்பு அலுவலர்கள் வீட்டுக்கு வரும்போது 33 கேள்விகளை கேட்டு, அதற்கான பதிலை பெறுவார்கள். இதனால் காலவிரயம் ஏற்படும். இதை தவிர்க்கவே மக்கள் தாங்களாகவே விவரங்களை இணையவழியில் நிறைவு செய்து வைத்திருந்தால், கணக்கெடுப்பு அலுவலர்கள் ஆய்வு செய்துவிட்டு உடனடியாக ஒப்புதல் வழங்குவார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின்போது வீடுகளுக்கு தகவல் சேகரிக்க வரும் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு உரிய விவரங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் அல்ல என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ்பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: