சென்னை: தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாக்கின்ற வகையிலும், மாநில உரிமைகளை காக்கின்ற வகையிலும் எப்போதும் போல் குரல் கொடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், லண்டன் சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தப்படி திமுக எம்பிக்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட அனைத்து எம்பிக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: திமுக ஆட்சி இருந்தவரை, மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிகள் வெற்றிபெற விடாமல் தமிழ்நாடு வெற்றிகரமாக தடுத்துள்ளது.
மேகதாது அணையின் ‘விரிவான திட்ட அறிக்கையை’ காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்காமல் திருப்பி அனுப்பவும், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பட்டியலில் இருந்தே நீக்கவும் வைத்து, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாத்து, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயன்ற கர்நாடகத்தின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தவர்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.
அதேநேரத்தில், கலைஞர் எப்படி ‘காவிரி நடுவர் மன்றம்’ கண்டாரோ, அதேபோல் மேகதாது அணை பிரச்னைக்கும் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஆட்சியில் இருந்தபோதே கோரிக்கை வைத்தார் அப்போதைய முதல்வர். காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதே காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட முக்கியக் காரணம் ஆகும்.
இப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிரான அரசினர் தீர்மானம் முன்மொழியப்பட்டபோது, திமுக தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘மேகதாது அணைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்ற திருத்த தீர்மானத்தை முன்மொழிந்து, அவ்வாறே அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது திமுகவின் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என இக்கூட்டம் பதிவு செய்கிறது.
மேகதாது அணைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை எவ்வித தாமதமும் இன்றி கர்நாடக அரசு திறந்து விடுவதையும் ஒன்றிய அரசு உறுதி செய்திட வேண்டும் என மழைக்காலக் கூட்டத் தொடரில் வலியுறுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையில் எப்போதும் போல் குரல் கொடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வாக திமுக எம்.பி.க்களின் குரல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒலித்திடும் என்று இக்கூட்டம் உறுதி செய்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் செயல்படுவார்கள்
திமுக எம்பிக்கள் கூட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்தக் குரலெழுப்புவார்கள். ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திமுகவின் நிலைப்பாடு இருக்கும். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு திமுக எம்பியும் செயல்படுவார்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
