புழல் சிறையில் கைதி மர்மச்சாவு அடித்துக் கொன்றதாக கூறி காவல் நிலையம் முற்றுகை: தொடரும் லாக்கப் மரணங்களால் பரபரப்பு

சென்னை: சேலையூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (44). இவரை, குட்கா விற்றதாக, சேலையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்த பாலாஜி, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நெஞ்சுவலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வியாபாரிகள் சேலையூர் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு, பாலாஜியின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலாஜியின் உறவினர்கள் கூறுகையில், ‘பாலாஜி மீது, சேலையூர் காவல் துறையினர் பொய் வழக்கு போட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு, அவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர்.’ என்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலாஜியின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தனர்.

தவறு கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் பாலாஜி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதியிடம் உங்கள் கோரிக்கையை அளியுங்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட பாலாஜியின் உறவினர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடரும் லாக்கப் மரணங்களால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: